உலக அரசியல் வலது சாரிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக   வேகமான பல மாற்றங்களைக் கண்டு வரும் இந்த காலகட்டத்தில்,உலகின் மக்கள் தொகையில்  இரண்டாம் இடம் வகிக்கும் முஸ்லிம் மக்கள் பெரும் சவாலையும் அச்சுறுத்தலையும் எதிர் நோக்கி உள்ளனர். 

சிரியா,பாலஸ்தீனம் போன்ற நாடுகள் அந்நிய சக்திகளின் பாதிப்பில் இருந்து வரும் வேளையில்,மியான்மரின் ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலையோ மிகவும் பரிதாப நிலையில் உள்ளது.

அகதிகள்

பௌத்த பேரினவாதத்தால் 2012ம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வன்முறை தாக்குதலில் நூற்றுக் கணக்கானோரின் மரணம், முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுதல் என தொடங்கிய வன்முறை வெறியாட்டத்தில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் சொந்த நாட்டின் அகதிகள் முகாமிலும், சுமார் இரண்டு லட்சம் பேர் அண்டை நாடான பங்காளதேசத்தின் அதிகாரபூர்வமற்ற முகாம்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கியும் உள்ளனர்.

 அதேபோல் 2013 ஆம் ஆண்டு மத்திய மியான்மரில் முன்னூறு பேர் கொண்ட பேரினவாதிகள் கும்பல் முஸ்லிம் பள்ளிவாசல்கள்,முஸ்லிம்களால் நடத்தப்படும்  தொழில் நிறுவனங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. 

காழ்ப்புணர்ச்சி

இந்த நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் குழுவினரால் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி அன்று ஒன்பது மியான்மார் பாதுகாப்பு படை அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து மியான்மரின் புதிய தலைவர் ஆங் சான் சூச்சி தனது பிரதிநிதியை பங்காளதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.தனது தேசத்தின் அகதிகள் "ரொஹிங்கியர்கள்"என அங்கீகரிக்காமல் "பெங்காலிகள்" என வர்ணித்ததன் மூலம் தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 இதனைத் தொடர்ந்து அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததோடு, தேடுதல் என்ற பெயரில் சட்ட விரோத கைதுகள், மோதல் படுகொலைகள் பாலியல் பலாத்காரம் என மியான்மர் அரசு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. இது பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் பொது ரைகைன் மாநில ஆளுநர் "அழுக்கடைந்த ரோஹிங்கிய பெண்களை" ராணுவத்தினர் தொடுவதில்லை என கொச்சைப் படுத்தியுள்ளார்.  தஞ்சமடைய நாடி வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களை அண்டை நாடான வங்கதேசமும் அகதிகளாக பதிவு செய்வதில்லை. வங்கதேசத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கும், தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் ரொஹிங்கியார்களே காரணம் என அந்த அரசு கருதுவதும் கவலைக்குரிய அம்சம் ஆகும். 

விமர்சனம்

மேலும் மியான்மார் கப்பல் படை வங்கதேச மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் சம்பவங்களும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.  இதற்கிடையே வங்கதேச அரசு மனிதர்கள் வாழத் தகுதியற்ற தென்கர் எனும் தீவுக்கு அகதிகளை மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

அரசியல் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத இந்த நிலையில் நவம்பர் 21, 2016 அன்று வெளியிட்ட யுனிசெப் அறிக்கையில், அகதிகளின் குழந்தைகள் மருத்துவ வசதிகள் இன்றி கூட்டம் கூட்டமாக உயிரிழக்கும் நிலை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளது. வங்கதேச அரசு மற்றும் மியான்மார் அரசின் நெருக்கடிகளால் அகதிகள் மலேஷியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு ஆபத்தான கடல்வழி பயணத்தை தேர்ந்து எடுக்கின்றனர். ஐநாவின் மனித உரிமை விசாரணை ஆணையர் ஸைத் ராத் அல்-ஹுசைன் இன் அறிக்கையின்படி "மியான்மார் ராணுவம் பிடிபடுபவர்களை அவர்களை உறவினர்கள் எதிரில் அடித்து உதைத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துவது மற்றும் கொலை செய்வது போன்ற அத்துமீறல்களை நடத்துவதன் மூலம் மற்றவர்கள் மனங்களில் பயத்தை விதைக்கின்றனர்"என குற்றம் சாட்டுகிறார்.

 இப்படி எல்லா தயாரிப்பில் இருந்தும் கொடுமைகளை எதிர்கொள்ளும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஐநா சபை உள்ளிட்ட அமைதியை விரும்பும் அனைத்து தரப்பினரும் மியான்மார் அரசிடம் அரசியல் ரீதியிலான தீர்வு காண வலியுறுத்துவதோடு அவர்களின் சொந்த மாநிலமான றொகைன் மாநிலத்தில் மீள் குடியேற்றுவதுடன், நடத்த பட்ட  அத்துமீறல்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க படவும்  வேண்டும்.

-ஐ. உஸ்மான்கான்


Who's Online

We have 56 guests and no members online