வங்க தேசத்தைச்  சேர்ந்தவர் ருமானா அகமது. முஸ்லிம் பெண்மணியான இவர் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் வேலை பார்த்து வந்தார்.

 இவர்  ஹிஜாப் அணிந்து தான் வேலைக்குச் செல்வார்.  வெள்ளை மாளிகையில் ஹிஜாப் அணிந்து போகும் ஒரே பெண் இவர் தான்.  2011ஆம் ஆண்டு முதல்  வெள்ளை மாளிகையிலும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலிலும் இவர் வேலை செய்துவந்தார்.  இந்நிலையில்,  அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப்,  7- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது என அறிவித்து தடை உத்தரவு பிறப்பித்தார். ட்ரெம்பின் ஒருதலைபட்சமான அறிவிப்பை கேட்ட ருமானா அதிர்ச்சி அடைந்தார்.

 வேலையைத் துறந்தார்

 உடனடியாக தனது ஊழியர் பதவியை துறந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் ருமானா.  இதனைத் தொடர்ந்து,  வேலையை விட்டு விலகியது பற்றி, தி அட்லாண்டிக்  என்ற நாளிதழில் ஒரு கட்டுரை  எழுதியிருந்தார். 

அதில் அவர்  ‘‘எனது நாட்டின் நலன்களையும், கொள்கைகளையும் பதுகாப்பதும், முன்னேற்றம் காண்பதும் தான் அங்கு எனது வேலையாக இருந்தது.  வெள்ளை மாளிகையில் இதற்கு முன் இருந்த ஒபாமா நிர்வாகம் என்னை நல்ல முறையில் நடத்தி அரவணைத்து வந்தது’’ என்று குறிப்பிட்டிருந்தார்..

 அச்சுறுத்தலாக இருந்தது 

‘‘டொனால்டு டிரம்ப் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி தொடர்ந்து குறை கூறி வந்தார். இதனால், கடந்த வருடம் மற்ற முஸ்லிம்களைப் போல நானும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தேன்’. . டிரம்பின்  நிர்வாகமும் அவருக்கு கீழே வேலை செய்யக் கூடியவர்களும் இஸ்லாம் குறித்து எதிர் கருத்துடையவர்களாக  இருக்கிறார்கள். இருப்பினும் அமெரிக்காவின் குடிமகளாக இருந்ததால், டிரம்ப் அதிபரான பிறகும் 8 நாட்கள் பணியில் நீடித்தேன். 7 பெரிய முஸ்லிம் நாடுகளின் பயணிகளுக்கும், சிரியாவின் அகதிகள் அனைவருக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதித்தார்.  இதனையடுத்து, என்னைப் போன்றவர்களை அச்சுறுத்தலாகப் பார்க்கும் ஒரு நிர்வாகத்துக்கு கீழே நீண்ட காலம் வேலை செய்ய முடியாது என உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

 அந்நியமாகிப் போனது

 வேலையை விட்டு விலகி விடலாம் என முடிவெடுத்த அன்று தான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிபருக்கான மூத்த ஆலோசகர் மிக்கேல் அன்டானிடம் தனது முடிவை ருமானா வெளிப்படுத்தி உள்ளார்.  ருமானாவின் திடீர் ராஜினாமா கடிதம் அவருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஒரு அமெரிக்க குடிமகளாகவும், நான் நேசிக்கும் ஒவ்வொரு விசயத்தை பற்றியும் குறை சொல்வதும் அதற்கு எதிராகவும் நடக்கும் ஒரு நிர்வாகத்தின் கீழ் வேலை செய்வது எனக்கு அவமானமாக இருக்கிறது என்றும், .டிரம்பின் காலத்தில் வெள்ளை மாளிகை தனக்கு அந்நியமாக மாறிப் போனது, அச்சமும், தொந்தரவுகளும் அதிகரித்தன என்று அவர் மனக் குமுறல்களை அந்த கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

 வெறுப்பு அரசியல்

ருமானா அகமதின் பெற்றோர் 1978-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். வெறுப்பு  அரசியல் விதைக்கப்படும் எல்லா நாடுகளிலும் சிறுபான்மை மக்கள் அச்சத்தையும் அவமானத்தையும் உணர்கிறார்கள். இந்தியாவில் 2004 முதல் 2013வரையிலும்  சிறுபான்மை மக்களுக்கு இல்லாத அச்சமும், நெருக்கடிகளும் 2014-ல் நரேந்திர மோடி பிரதமரான போது ஏற்பட்டது. அதேபோல, அமெரிக்காவில் டிரம்ப்பின் வருகையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும்  அமெரிக்க வரலாற்றில் டிரம்பின் காலம் கருப்பு அதிகாரமாக இருக்கப் போகிறது.

 


Who's Online

We have 48 guests and no members online