இறைத்தூதர் முஹம்மது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமிடம், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் உள்ளத்தின் மீது நிலவச் செய்வானாக என பொருள்படும் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ’ என்ற முகமனை, ஒருவரை சந்தித்தவுடன் முதலில் கூறும்படி அழகிய முறையில் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி மற்றும் முஸ்லிம்)


கடந்த வார இதழில் (பணிக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் ஹிஜாப் சவால்கள் ) பற்றி கோடிட்டு காட்டியிருந்தோம். அதேபோல, நமது முஸ்லிம் சகோதரிகள் முன்னுக்குப் பின் முரணான சவால்களை, அவர்கள் பணிபுரியும் இடங்களில் சந்திக்கின்றனர்.


ஸலாமும், கடமையும்


அத்தியாவசியமான ஸலாத்தை ஏற்று அவசியமான பதில் அளிக்க வேண்டிய கடமை இருந்தும், சில நேரங்களில், அவர்களால் பதில் ஸலாம் தருவது இல்லை. மறுத்தும் விடுகின்றனர். பிற சமயத்தினர் மத்தியில் மறந்தும், மறைத்தும் விடுகின்றனர். மேலும், பிற சமய மக்கள் மிகுந்த சூழலில் ஸலாம் கூறுவது தவறு என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்துள்ளனர்.


நாம், நம் முஸ்லிம் சகோதரிகள் மத்தியில், அவர்கள் ஸலாம் சம்மந்தப்பட்ட விசயத்தில் சங்கோ ஜப்படுவதை கண்கூடாக பார்த்து அனுபவித்துள்ளேன். சிலவேளைகளில், ஸலாமிற்கு முணுமுணுத்தபடி பதில் அளிப்பதையும், அது பதில் ஸலாம் என்பதை புரிந்து கொள்ளவே முடியாத சூழலையும் நான் வருத்தத்துடன் அனுபவித்தது உண்டு. எந்த சூழலிலும் நாம் முஸ்லிம் என்பதிலும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதிலும் பெருமையாகக் கருத வேண்டும்.


ஸலாம் குறித்து அல்புஹாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களில் “ அறிந்தவர், அறியாதவர் எனும் பேதமின்றி முஸ்லிம்கள் முகமன் பேணுதல் வேண்டும் “ என வாழ்வியல் கொள்கைக் கோட்பாடாக உள்ளது. எனவே, முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளும் வகையில், பணியிடங்களில் தயக்கமின்றி தைரியமாகஅழகிய முறையில் ஸலாம் பரிமாறிக் கொள்ள வேண்டும். எவர் ஒருவர் ஸலாம் கூறுவதில் முந்திகொள்கின்றாரோ அவர் அருளுக்கு உரியவர் ஆவார்.


கடமையும், தேவையும்


இஸ்லாத்தில் தொழுகையை நிலைநாட்டுவது என்பது அல்லாஹ்வை நம்புவதற்கு உரிய அடிப்படை ஆகும். மேலும் நமக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் இறைவனுடன் நாம் உரையாடுவதற்கான ஊடகம் ஆகும். இதனால் நம் பாவங்கள் கழுவப்படும் என்றும் அறிந்து வைத்துள்ளோம்.பணியிடங்களில் முஸ்லிம் சகோதரிகள் தொழுகையை நிறைவேற்றுவது என்பது, பிரச்னைக்கு உரிய விசயமே அல்ல. ஆனால், சில இடங்களில் நமது தொழுகைக்கான இடங்கள் இல்லாமல் இருப்பதும், நமது கோரிக்கைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டும் வருகின்றது.


இந்நிலையில், நாம் இறை வணக்கம் செலுத்த இடம் கிடைக்காத பட்சத்தில், நம் முஸ்லிம் சகோதரிகள், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற, புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டிய நிர்பந்த நிலை உள்ளது.


அதேபோல, எனது பணியிடத்தில் தொழுகைக்கான இடம் வரையறுக்கப்படவில்லை. எனவே, ஒருமுறை நான் வெட்டவெளியில் நின்று தொழுகை கடமையை நிறைவேற்றினேன். இதனைத்தொடர்ந்து, இவ்வாறு தனிமையில் பொது இடத்தில் தொழுகையில் ஈடுபடுவது பாதுகாப்பற்றது என சிலரால் அறிவுறுத்தப்பட்டேன். பின்னர், பணி முடிந்து எனது இல்லம் திரும்பியவுடன், லுஹர், அஸர் மற்றும் சில நேரங்களில் மஹ்ரிபு தொழுகையை தாமதமாக நிறைவேற்றி வந்தேன். இறுதியில், எனது அலுவலகத்தில் அமர்ந்த நிலையிலேயே தொழ முடிவு செய்தேன். இந்த முடிவு எனக்கு எளிதில் கை கூடியது.


‘‘தனது அடியார்கள் அவசியமில்லாத சிக்கலுக்கு உள்ளாவதை அல்லாஹ் விரும்புவதில்லை” பெருமானார் ஸல் அவர்களிடம், சிறந்த செயல் எதுவென வினவப்பட்டபோது, ‘‘ தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’’ என பதில் உரைத்தார்கள். (முஸ்லிம்)


முக்கியமாக, என் அனுபவத்தில், வேறு சில சவால்களையும் நான் சந்திக்க நேர்ந்தது. என்னைப் பற்றி எவரேனும், என்ன நினைப்பார்களோ என்ற அச்ச உணர்வுடன், யாருமற்ற பெண்களின் ஓய்வறையில் தொழுகைக்கான ஒளு செய்து வந்தேன். நாளடைவில், நாட்கள் செல்லச் செல்ல, எவர் இருந்தால் என்ன..என, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை வலுப்பெற்றது.
திருக்குர் ஆன் தொழுகை குறித்து கூறுகையில், தொழுகை இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று. அதன் அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. எனக்குத் தெரிந்த வரை பல நிர்வாகிகளும், நிறுவனங்களும், தங்களது முஸ்லிம் சமுதாய ஊழியர்களுக்காக தொழுகைக்கான அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர்.


எனவே உங்கள் முதலாளி களிடம் கலந்தாலோசித்து, தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்வது சிறப்பு.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

 1) பணிக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் ஹிஜாப் சவால்கள்

 2) பணிக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

 3) பிற சமய மக்களுடனான பணியிடத் தொடர்புகள்

 

 


Who's Online

We have 54 guests and no members online