10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழியை கட்டாயமாக்க கூடாது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை பள்ளிக்கல்வித் துறை கட்டாயமாக்கக் கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜவாஹிருல்லா 15.05.2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி 1-ல் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுதவேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

இதுசம்பந்தமாக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘நடப்பு கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பகுதி 1-ல் தமிழ் மொழி பாடத்தை ஆசிரியர்கள் கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

2006-07 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 2015-16 கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். பிற மொழி படித்த மாணவர்கள் 10-ம் வகுப்பில் தமிழ் எழுத முடியாத நிலை ஏற்பட்டால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்களே பொறுப்பேற்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மை மக்களின் மொழியை பாதுகாக்கும் உரிமையை அரசியல் சட்டம் கொடுத்துள்ளது. தாய்மொழியில் மாணவர்கள் படிப்பது அவர்களது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு கூறியுள்ளது. எனவே, சிறுபான்மையின மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் தமது தாய்மொழியை கற்கவும், அதில் தேர்வு எழுதவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.