கேரள பவனில் 'மாட்டிறைச்சி' சோதனை: மமக கண்டனம்

டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி சோதனை மேற்கொண்டதற்காக, டெல்லி காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா 28/10/2010 அன்று வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் உள்ள கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறிய சில நபர்களுடன் டெல்லி போலீசார் கேரள பவனுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசாரின் இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது.

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அமைச்சர்களும், பாஜக மாநில முதல்வர்களும், பாஜக தொண்டர்களும் ஈடுபட்டு வருவது கவலைக்குரியது.

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது என்கிற ரீதியில் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருவதை மத்திய அரசு தடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வருகிறது.

நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகள் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மதநல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கிறது.

எனவே, மத்திய அரசும், பிரதமர் மோடியும் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு மதச்சார்பின்மையை சிதைக்கும் சக்திகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.