இலங்கை கடற்படை கைது செய்துள்ள பாம்பன் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை

இலங்கை கடற்படை கைது செய்துள்ள பாம்பன் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக 15.03.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில், ''ராமநாதபுரம் தொகுதி, பாம்பன் பகுதியை சேர்ந்த 3 நாட்டுப்படகு, 1 விசைப் படகுகளில் கடந்த 12ஆம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து 28 அப்பாவி மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பொதுவாக நாட்டுப்படகு மீனவர்கள் அதிக தூரம் பயணிக்காமல் தமது எல்லைக்குள்ளேயே மீன்பிடிப்பது வழக்கம், நாட்டுப்படகு மீனவர்கள் எல்லை தாண்டினார்கள் என்ற இலங்கை கடற்படையின் குற்றசாட்டு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.

எனவே, மத்திய மாநில அரசுகள் தலையிட்டு கைது செய்யப்பட்ட 28 மீனவர்களை விடுவிப்பத்றகும் ஏற்கெனவே இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்கவும் அவர்களின் படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த பலமான நடவடிக்கைகளை எடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்'' என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.