மீனவர்களை பாதிக்கும் இனயம் துறைமுக திட்டத்தை கைவிடுக

மீனவர்களை பெரிதும் பாதிக்கும் இனயம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து 23.03.2016 அன்று ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் இனயம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த துறைமுகம் அமைக்க 390 ஹெக்டேர் நிலப்பரப்பில் மணல் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

இந்த சரக்கு முனையத்திற்கு தேவையான சாலை, ரயில் போக்குவரத்து வசதிக்காக மீனவர்களின் குடியிருப்புகள், நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படும் நிலை உள்ளது. இதனால் தேங்காய்பட்டணம் முதல் குளச்சல் வரை வசிக்கும் 70 ஆயிரம் மீனவர்கள் இடம்பெயர்ந்து சிதறடிக்கப்படுவார்கள். மேலும், சங்கு, சிப்பி தயாரிக்கும் தொழில்களும் முடங்கும்.

 

எனவே, மீனவர்களை பெரிதும் பாதிக்கும் இந்த துறைமுக திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.