சுங்கக் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக 30.03.2016 அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.

 

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்காக செலவிடப்படும் தொகையை சுங்கக் கட்டணம் மூலம் முழுவதும் வசூல் செய்யப்பட்ட பிறகு அந்த சாலையின் பராமரிப்பு செலவுக்காக குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது சாலைக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளிலும் சாலைகள் அமைக்க செலவிடப்பட்ட தொகை பல ஆண்டுகளுக்கு முன்பே வசூல் செய்யப்பட்டுவிட்டது.

சாலை அமைத்ததற்கான செலவுத் தொகை முழுவதுமாக வசூல் செய்யப்பட்ட பிறகும் 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுவது முறையற்றதாகும். இந்நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகவே உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கக் கட்டண மையங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த 19.02.2016 நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் வலுவாக கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், இந்தியாவில் ஒரு வாகனம் வாங்கப்பட்டால் அப்போதே அதற்கு வாழ்நாள் முழுமைக்குமான சாலைவரி வசூலிக்கப்படுகிறது.

இதற்குப் பிறகும் நெடுஞ்சாலைகளில் பயணிக்க தனியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது மக்கள் விரோத செயலாகும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அந்தச் சாலைகளில் சுங்கக் கட்டண மையங்களை உடனே அப்புறப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்