சவுதி அரேபியாவில் தவிக்கும் 63 இந்திய மீனவர்களை மீட்க வேண்டும்

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 63 இந்திய மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம், நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் கேரள மாநில மீனவர் உட்பட 63 இந்திய மீனவர்கள் சவுதி அரேபியாவின், கிழக்கு மாகாணம் ஜுபைல் நகரில் கடந்த 5 ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகிறார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

யூசுப் கலில் இப்ராஹிம் அல்-அமோரி என்ற நிறுவனத்தில் மீன்பிடி வேலைகளுக்காக இம்மீனவர்கள் சென்றுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இந்திய மீனவர்களுக்கான பங்குகள் கொடுக்கப்படாததால் அவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களை மீட்டுத் தருமாறு புதுடெல்லியில் உள்ள வெளியுறவுத் அமைச்சகத்திற்கும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். எனவே, சவுதி அரேபியாவில் பரிதவிக்கும் இந்திய மீனவர்களை மீட்டு உரிய நடடிவக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.