ஹென்றி திபேன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய மதுரை காவல் துறை முயற்சித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக 25/08/2016 அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரையை தலைமையிடமாக வைத்து மனித உரிமைகளுக்காகப் போராடிவரும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் வழக்குறைஞர் ஹென்றி திபேன் மீது பொய் வழக்கைப் பதிவு செய்துள்ள மதுரை மாநகர காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மனித உரிமை தளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடு பாராமல் பல்வேறு தடைகளைக் கடந்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்வது, ஆவணப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவது அவர்களுக்கு புகலிடம் வழங்குவது முதலிய பணிகளை மக்கள் கண்காணிப்பகம் மூலம் செய்து வருபவர் வழக்கறிஞர் ஹென்றி திபேன்.
கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் உள்ள 22 மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மனித உரிமை கல்வியை கொண்டு சென்றவர். அவரது அயராத மனிதஉரிமை தொண்டுக்காக அவருக்கு சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனம் (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) அமைப்பு தனது 8-வது சர்வதேச மனித உரிமை விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த 24.05.2016 அன்று மதுரை மாவட்டம், மொட்டமலைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்கள் பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் புகார் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, மக்கள் கண்காணிப்பகத்தின் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது, அதில் செய்யாத திருட்டுக் குற்றத்திற்காக காவல்துறை விசாரணை எனக் கூறி அழைத்துச் சென்று 63 நாட்களாக அப்பாவி கூலித் தொழிலாளர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கியும், பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டதாகத் தெரியவந்ததும், நீதிமன்ற ஆட்கொணர்வு மனு மூலம் பெண்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சினை குறித்து மக்கள் கண்காணிப்பகம் மூலம் கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு குழுவின் அறிக்கையின் படி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் முடிந்த 10 நாட்களுக்குப் பின் ஹென்றி திபேன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய மதுரை காவல் துறை முயற்சித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
அதேபோல் அப்பாவி கூலித் தொழிலாளர்களை 63 நாட்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்த கன்னியாகுமரி சிறப்புக் காவல் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.