இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்துக

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் 01.09.2016 வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓபிசி என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதற்கு ஓபிசி சான்றிதழ் பெற வேண்டுமானால் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்தான் இருக்க வேண்டும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2013-ல் வருமான உச்ச வரம்பை நகர்புறங்களில் ரூ.12 லட்சம், கிராமப்புறங்களில் ரூ.9 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை மத்திய அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் மண்டலக்குழு பரிந்துரைத்தவாறு 27 சதவீதம் இடங்களை ஓபிசி பிரிவினருக்கு நிரப்ப முடியாமல் பாதி அளவுதான் ஒதுக்கீடு செய்கின்ற நிலைமை இருப்பதால் தேசிய பிற்படுத்தப்பட்டடோர் ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்மை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை அளித்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் வருமான உச்ச வரம்பு ரூ.6 லட்சம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாததால் அதை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.