காவிரி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

காவிரி நதி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக 07.09.2016 அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு - கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடவேண்டும். இந்த ஆண்டு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்ததால் அதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் வாழு வாழவிடு என்ற அடிப்படையில் உதவ வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டனர்.

 

மேலும், கர்நாடக அரசு காவிரியில் இருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்திரவிட்டனர். இந்த தீர்ப்பு வெளிவந்த உடன் உடனடியாக கர்நாடக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார்.

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முழுவதும் போராட்டங்களும், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களினால் இரு மாநிலங்களுக்கிடையே செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தொடர் போராட்டங்களினால் கர்நாடகத் தமிழர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே தமிழக அரசு கூட்ட வேண்டும்'' என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.