அதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களின் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக 09.09.2016 அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய ரயில்வே துறையால் முக்கிய நகரங்களை இணைக்க இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் கட்டணத்தை இன்று முதல் மாற்றி புதிய கட்டணத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டண முறையால் 50 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தவும், அதனால் ரூ.500 கோடி கூடுதல் வருமானத்தைப் பெறவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

 

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களில் முதல் 10 சதவீதப் படுக்கைகளுக்கு சாதாரண கட்டணமும் அதற்குப் பின்பு ஒவ்வொரு 10 சதவீதப் படுக்கைகளுக்கும் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இது 3ஏசி, 2ஏசி மட்டுமே இந்த கட்டண உயர்வு பொருந்தும் என்றும் முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் நடுத்தர மக்கள் பெரிதும் பயன்படுத்தும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட ரயில் கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் புதிய கட்டண முறையால் விமானக் கட்டணங்களைவிட அதிகமாக கட்டணத்தை வசூல் செய்யவிருக்கும் ரயில்வே துறை பயணிகளுக்கு எதிரான துறையாக மாறி வருகிறது.

நெருக்கடி காலங்களில் அத்தியாவசிய பொருட்களைப் பதுக்கி வைத்து கிராக்கி ஏற்படும் போது அதிக விலைக்கு விற்கும் பிளாக் மார்கெட் பணியை தற்போது ரயில்வே துறை கையில் எடுத்துள்ளது. ரயில் சேவையிலும், ரயில் நிலையங்களின் தூய்மையிலும் அக்கறை செலுத்தாமலும், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தாமலும் உள்ள ரயில்வே துறை கட்டணங்களை மட்டும் புதிய வழிகளில் அடிக்கடி உயர்த்தி சுமையை பயணிகள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல.

எனவே, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்தக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்