உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் வரிகளை உயர்த்தியிருப்பது ஜனநாயக விரோத மக்கள்விரோத நடவடிக்கை

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:


தமிழகத்தில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதமும் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்துவரியின் சதவீதம் சிறிதும் ஏற்றுக்கொள்ளும் அளவில் இல்லை. திடீரென 100 சதவீதம் வரி கூடுதலானால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அதேபோல் இந்த வரி உயர்வை வீட்டு உரிமையாளர் பலர் வாடகைதாரர்கள் மீது சுமர்த்தி விடுவார்கள். இதனால் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிது பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள்.


ஏற்கெனவே, பொருளாதார மந்தநிலை காரணமாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் அல்லல்பட்டு வரும் ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது வரி உயர்வைச் சுமத்தி இருப்பது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.
உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் வரிகளை உயர்த்தியிருப்பது ஜனநாயக விரோத மக்கள். விரோத நடவடிக்கை ஆகும்.


இந்த வரி உயர்வுக்கு உயர்நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, இதே உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல்களை விரைந்து நடத்துமாறு அறிவுறுத்தி இருந்ததைக் கவனத்தில் எடுத்தகொள்ள தவறுவது வேடிக்கையானது. உள்ளாட்சி மன்ற தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தி முடித்திருந்தால் இதுபோன்ற அதிகளவிலான வரி உயர்வைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்.


எனவே, மக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்தச் சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி உள்ளாட்சிகளுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசை என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.