குஜராத்தில் தமிழக மருத்துவ மாணவருக்கு இன ரீதியாக துன்புறுத்தல்: தமிழக அரசு தலையிட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

குஜராத்தில் தமிழக மருத்துவ மாணவர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது தொடர்பாக, தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக ஜவாஹிருல்லா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,


“குஜராத் மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் நெல்லையைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் தேர்வு எழுத அக்கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


மருத்துவ மாணவர் மாரிராஜ் அக்கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் மொழி ரீதியாகியும், இன ரீதியாகவும் தொடர்ந்து தொந்தரவு அளிக்கப்பட்டது என்றும், இதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்தாகவும் மாணவர் மாரிராஜ் கூறியுள்ளார்.


தற்கொலை குறித்த முதல் தகவல் அறிக்கையில், தற்கொலைக்கான காரணம் அக்கல்லூரி பேராசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்தப் புகாரை திரும்பப் பெறுமாறும் அதுவரை தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படாது என்றும் மறைமுகமாக அக்கல்லூரி நிர்வாகம் மாணவரை மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கெனவே, வட மாநிலங்களில் பயின்ற தமிழக மாணவர்கள் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு காரணங்களை கூறிய பிறகு மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மாணவர் மாரிராஜை இன மற்றும் மொழி ரீதியாக அவமானப்படுத்தி உள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


எனவே, தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு, மருத்துவ மாணவர் மாரிராஜ் வரும் மே மாதம் தொடங்கவிருக்கும் தேர்வை எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வடமாநிலங்களில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும், இன மற்றும் மொழி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்”.


இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.