டிரெக்கிங் தொடர்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்

குரங்கணி விபத்து தந்துள்ள படிப்பினைகளை கவனத்தில் கொண்டு டிரெக்கிங் தொடர்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதி சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் 9 பேர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி மரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோர் விரைவில் முழுமையான குணம் அடைய பிரார்த்திக்கிறேன்.

மலையேறும் பயிற்சிகளை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் எந்தவித சரியான தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காதது தான் இந்தக் கோர விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

டிரெக்கிங் எனப்படும் ஒருவகை மலையேறும் சாகசப் பயணம் மிக மிக நவீனமான தகவல் தொடர்பு சாதனங்களுடனும் தகுந்த முன்னேற்பாடுகளுடனும் குறிப்பாக மலைவாழ் மக்களின் வழிகாட்டுதலுடனும் வனப்பகுதியினரின் சரியான ஒருங்கிணைப்புடன் நடைபெற வேண்டியது இன்றியமையாததாகும்.

குரங்கணி விபத்து தந்துள்ள படிப்பினைகளை கவனத்தில் கொண்டு டிரெக்கிங் தொடர்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.