தமிழக மக்களின் உணர்வை மதித்து அண்ணா அடக்கவிடத்திற்கு அருகில் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட தமிழக அரசு முன் வர வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் அடக்கவிடத்திற்கு அருகில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடல் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி தமிழக அரசு மறுத்துள்ளது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட முடிவாக கருத வேண்டியுள்ளது.


தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது முழு அரசு மரியாதை செய்து அடக்கம் செய்ய கலைஞர் அரசு முடிவெடுத்த போது , உயர்பதவியில் இல்லாதவருக்கு அரசு மரியாதை செய்வதில் சட்டச்சிக்கல் உள்ளது என்றார் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இதை ஏற்றுக் கொள்ள மறுத்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் காந்தியடிகள் எந்த உயர்பதவியில் இருந்தார்.அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்படவில்லையா? என்று கேட்டு பெரியார் உடலை முழு அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய அரசின் சார்பில் கொள்கை முடிவு எடுத்து அதனை நிறைவேற்றினார் கலைஞர் அவர்கள்.


மெரினாவில் உடல் அடக்கம் செய்ய கூடாது என்று தான் வழக்கு தொடுத்தேன். அண்ணா அடக்கவிடம் இருப்பது கூவம் நிதி கரையில். அண்ணாவை அடக்கம் செய்யும் போதே அது இடுகாடு என்று வரையறுக்கப்பட்டு விட்டது. எனவே அண்ணாவின் அடக்கவிடத்திற்கு அருகில் கலைஞர் அவர்களை நல்லடக்கம் செய்ய தடை ஏதும் இல்லை என்று எடுத்துரைத்துள்ளார் வழக்கு தொடுத்த வழக்கறிஞர் துரைசாமி. வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ளவும் அவர் முன்வந்துள்ளார். எனவே நீதிமன்றத்தில் வழக்கு என்று தமிழக அரசு சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலாது. அரசு கொள்கை முடிவு எடுத்து அண்ணா அடக்கவிடத்திற்கு அருகில் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு எளிதில் வழிவகுக்கலாம்.

அண்ணா நினைவிடத்திற்கு அருகில் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்படவேண்ம் என்பது ஒத்துமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக அரசு இந்த உணர்வுகளை மதித்து உடனடியாக அண்ணா அடக்கவிடத்திற்கு அருகில் கலைஞர் அவர்கள் உடல் அடக்கம் செய்ய வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.