பக்ரீத் பண்டிகையில் புதுச்சேரி மாநில மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நாளைப் புதன்கிழமை (22.8.2018) முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. நாளைய தினத்தில் புதுச்சேரி மாநிலம் சார்பில், மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் சென்டாக் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பக்ரீத் தினத்தன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்டாக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளது. இப்புனித நாளில் முஸ்லிம் மாணவர்கள் தங்களின் இறைக் கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் கலந்தாய்வில் பங்கேற்பது என்பது சிரமம்.


எனவே, நாளை நடைபெறவுள்ள மருத்துவ கலந்தாய்வை பக்ரீத், ஓணம் போன்ற பண்டிகைகளுக்கு பிறகு ஒரு தேதிக்கு மாற்றம் செய்து ஒத்திவைக்க சென்டாக் நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும் எனப் புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.