செப். 10 அன்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.17 காசுகளாகவும் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின்  விலைஉயர்வை கட்டுப்படுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருவது என்பது வேதனைக்குரியது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழு வதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, நமது நாட்டில் குறைக்காமல், அதன் முழுபயனை மக்களுக்குத் தராமலும் மக்கள் பணத்தை பகல் கொள்ளையடித்த மத்திய பாஜக அரசு. தற்போது சர்வதேச பிரச்சினைகளால் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றி வருகிறது. 
 
இந்த விலை உயர்வால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்கு மட்டும் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்துவிட்டு தனது சொந்த நாட்டில் பல மடங்கு வரிகளைச் சுமத்தி இந்திய மக்களையே பாஜக அரசு வஞ்சித்து வருகிறது.
 
பாஜக அரசின் இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க கோரியும் காங்கிரஸ் மற்றும்  இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் 10ஆம் தேதி நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது. இப்போராட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.