எட்டு வழிச் சாலை திட்டம்: மக்களின் கருத்தை அறிய வந்த யோகேந்திர யாதவ் கைது! மமக கண்டனம்

பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

விவசாயத்தையும், விவசாயிகளையும் நிர்மூலமாக்கும் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்தை கேட்க வந்த இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் அவரது குழுவினரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்களைக் காவல்துறையினர் தாக்கியதாகவும் கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டதாகவும் யோகேந்திர யாதவ் ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் கருத்து கேட்க வந்தவர்களைக் கைது செய்தது மட்டுமில்லாமல் அவர்களை தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்திய பாஜக அரசும், அதன் கைப்பாவையாக இருக்கும் தமிழக அரசும் தனக்கு எதிரான குரல்களை முடக்க இதுபோன்ற அடக்குமுறையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது ஏற்றுக்கொள்ள இயலாதது.
எனவே, தமிழக அரசு கைது செய்யப்பட்டுள்ள யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.