நெல்லை மாவட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள விவசாயம் சார்ந்த செழிப்பான பகுதியாகும். இந்த பகுதியில் மாமன்-மச்சான்கள் உறவுமுறை பேணி சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் இந்து முன்னணி உள்ளிட்ட சங்கி அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இப்பகுதி மக்கள் இவர்களின் விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புறந்தள்ளி வரும்போதும் இந்த தீவிரவாத அமைப்புகள் வெளியிடங்களில் இருந்து கூலிக்கு ஆட்களைக் கொண்டுவந்து இங்குள்ள பகுதிகளில் பரவலாக குடிஅமர்த்தி அவர்களைக் கொண்டு அவ்வப்போது சிறுசிறு பூசல்களை உருவாக்கி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் ரதயாத்திரை என்ற பெயரில் நடந்த ஒரு வாகன யாத்திரை மூலம் தமிழகத்தில் குறிப்பாக நெல்லையின் மேற்கு மாவட்ட பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த சங்பரிவார் சக்திகள் எடுத்த முயற்சியை தமிழ் சமூகம் சமயசார்பற்று ஒன்றுதிரண்டு ஜனநாயக வழியில் போராடியதன் மூலம் முறியடித்தது.

இந்த ஒற்றுமையை ஜீரணிக்க முடியாத பாசிச சக்திகள் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் நெல்லை மாவட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகத்திலும் வன்முறையைத் தூண்டிவிட்டு அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை அறுவடை செய்யலாம் என்று கணக்கிட்டு செயல்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக செங்கோட்டைக்கு அருகில் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிலையைக் கரைக்க காவல்துறை இடம் அனுமதி வாங்கிக்கொண்டு நேற்று வியாழன் மாலை எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் முஸ்லிம்கள் வாழும் தெருக்களில் பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய முஸ்லிம் இளைஞர்களை அங்கிருந்த குண்டர்கள் கடுமையாகத் தாக்கியதுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம்களின் கடைகளை மட்டும் சூறையாடி பொருட்கள், கையிருப்பு பணம் மற்றும் இறைச்சிக் கோழிகளை களவாடிச் சென்றுள்ளனர். தமுமுக, மமக, முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் வெட்டி சாய்த்துள்ளனர்.

ஒவ்வொரு முறை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு முன்பும் அமைதி கூட்டம் நடத்தி ஒப்பந்தம் செய்துகொள்ளும் காவல்துறை, தொடர்ந்து வரைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறுவதன் விளைவே இதுபோன்ற பிரச்னைகள் தொடர்வதற்கு காரணமாகிறது. மேலும் தென்காசி போன்ற பகுதிகளில் இரு தினங்களாக கலவரத்தைத் தூண்டும் வன்முறைச் பேச்சுக்கள் ஒலிபரப்பப்படுவதை எமது நிர்வாகிகள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக இன்று காலை தென்காசியில் கீழே புளியரை பகுதியில் இரண்டு முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழக அரசும் காவல்துறையும் பாசிச சக்திகளின் இந்த திட்டமிட்ட துல்லியத் தாக்குதல் சதிகளைக் கண்டறிந்து அதனை திட்டமிட்டவர்கள் உட்பட அனைவரையும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் பொருளாதார சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பெரும் கலவரத்திற்கு திட்டமிட்டுள்ள சங்கபரிவாரங்களின் சதிகளை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டுமென கோருகிறேன்.