நக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
 
மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான திரு. கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைதுச் செய்யப்பட்டிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 
பாலியல் புகாரில் சிக்கி கைதுச் செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் தொடச்சியாக எழுதியதை காரணம் காட்டி நக்கீரன் கோபால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து எழுதியது ஆளுநர் பணியில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு திரு. கோபால் அவர்கள் கைதுச் செய்யப்பட்டிருப்பது ஆளுநர் அலுவலகத்தின் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கைதுச் செய்யப்பட்டுள்ள திரு. கோபால் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச நிலையாக அமைந்துள்ளது. 
 
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் கருத்துரிமைக்கு பெரும் ஊறு விளைவித்து வருகிறாகள். நாட்டின் நீதி பரிபாலன சபையான உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிக மோசமாக விமர்சித்த பாஜகவின் தேசீய செயலாளர் ஹெச். ராஜாவை கைதுச் செய்யாத காவல்துறை, ஆளுநர் அலுவலகம் புகார் அளித்த உடனேயே நக்கீரன் கோபாலை கைதுச் செய்திருப்பது தமிழக அரசின் பாரபட்சப் போக்கை அம்பலப்டுத்தியுள்ளது. 
 
நக்கீரன் கோபால் அவர்கள் கைதுச் செய்திருப்பது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுநரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர் தான். ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்தால் அது அவரது பணியில் தலையிடுவதாக குறிப்பிடுவது தமிழகத்தில் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்ட்டுள்ளது என்பதன் அடையாளமாக அமைந்துள்ளது. கைதுச் செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபால் அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் உடனே திரும்ப பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.