18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் ஜனநாயகத்தை காக்க உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்!

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் ஜனநாயகத்தை காக்க உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி 18 பேரும் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.


இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தகுதி நீக்கம் செல்லும் என இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் தற்போது காலியாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இந்த தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின், பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளை தீர்க்கவும், அதுசம்மந்தமாக சட்டமன்றத்திலே குரல் எழுப்பவும் உரிய பிரதிநிதி இல்லாதது வேதனையானது.


எனவே, 18 மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 சேர்ந்து உடனடியாக தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்து ஜனநாயகத்தை காக்க முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.