தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை: முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலையில் மெத்தனம்! மமக கண்டனம்!!

 
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள அதிமுகவினர் மூவரையும் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததின் பேரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுதலையாகின்றனர்.
 
கடந்த 2000-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.  அப்போது கலவரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினர். இதில் பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரைத் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்து இன்று ஆளுநரின் ஒப்புதலுடன் விடுதலை செய்துள்ளது. 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டவர்களை விடுதலை செய்ய  மாநில அரசிற்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி  உட்பட அனைத்து  எதிர்க்கட்சிகள் சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் அதனைச் செவி மடுக்காத தமிழக ஆளுநரையும் அதற்கு உரிய அழுத்தத்தை தராத மாநில  அரசையும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.
 
அதேபோல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விடுதலை செய்யப்படாமல் உள்ள ஆபுதாஹிர் உட்பட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதுகுறித்து சிறிதும் கவனத்தில் கொள்ளாத தமிழக அரசு தற்போது தனது சொந்த கட்சிக்காரர்களை மட்டும் விடுதலை செய்து ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் தொடர்பான விஷயத்தில் ஒரு தலைபட்சமாக நடந்துள்ளது என்பது தமிழக முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏழு தமிழர்களையும், கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளை உடனடியாக ஆளுநர் மூலம் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.