ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்:  பாஜகவின் வெறுப்பரசியலுக்கு மக்கள் தகுந்த   பாடம் புகட்டியுள்ளார்கள்!

 
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பான அரையிறுதிப் போட்டி என்று வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களில் சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிப் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இழுபறி நிலை இருந்தாலும் அம்மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த காங்கிரஸ், பாஜகவிற்கு இணையான நிலையை அடைந்துள்ளது. 
 
நாட்டில் மக்களிடையே நல்லிணக்க நிலவ வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுப்படுத்தி அரசியல் பயனடைய முயன்ற பாஜகவிற்கு மக்கள் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்கள்.
 
ஹிந்தி பேசும் மூன்று மாநிலங்களில்; கடந்த தேர்தல்களில் மிகவும் பின்தங்கியிருந்த காங்கிரஸ் கட்சி பெருமளவில் வெற்றிப் பெற்றுள்ளது பாஜகவின் வெறுப்பரசியலை பெரும்பாலான ஹிந்து மக்கள் வெறுக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளன. குறிப்பாக இந்த மாநிலங்களில் மிக அதிகமாக தேர்தல் பரப்புரை செய்த உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திராமல் பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று சட்டவிரோதமாக பேசியதற்கு பெரும்பாலான இந்து மக்கள் தகுந்த பதிலடியை இந்தத் தேர்தலில் அளித்துள்ளார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திராமல் சட்டம் இயற்றி பாபர் பள்ளிவாசல் வளாகத்தில் ராமர் கோவில் கட்ட முயன்றால் தொடர்ந்து பாஜக தோல்வியைத் தழுவும் என்பதற்கான அறிகுறியாகவும் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
 
வளர்ச்சியின் பெயரால் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசு அனைத்து துறைகளிலும் பெருமளவில் தோல்வி அடைந்துள்ளது என்பதற்கான மக்கள் தீர்ப்பாகவும் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மக்களின் உணர்ச்சியைத் தூண்டி எல்லா காலங்களிலும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்பதற்கு பாஜகவிற்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ம.பி. வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள்.
 
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் சிறப்பான வெற்றியை அந்த மாநிலத்தில் பெற்றிருக்க முடியும் என்பதைப் பாடமாக எடுத்துக்கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டுவர காங்கிரஸ் கட்சி இன்னும் தீவிரமாக முயலவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சிறுபான்மையின மக்களுக்கு தனது ஆட்சிக் காலத்தில் சிறப்பான நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்திய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது. மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திரு. சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.