ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு: எடப்பாடி பதவி விலக வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை


தூத்துக்குடியில் வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவித்து வந்த வேதாந்தாவின் தாமிர உருக்காலை என்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியான நடத்திய போராட்டத்தின் காரணமாகத் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் அந்த ஆலையை மூடியது.


தமிழக அரசின் இந்த நடவடிக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவைத் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அக்குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையில் முன்னறிவிப்பின்றி ஆலையை முடியது நியாயமில்லை எனத் தெரிவித்து அந்த ஆலையைத் திறக்கலாம் என்று பரிந்துரைத்தது.


தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது எனத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தைத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்கவும் வேண்டும் என்றும் அந்த நாசகரமான ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு மாபெரும் அநீதியாகும்.


இந்த ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 உயிர்களைப் பலிகொடுத்த பின்பும் இந்த ஆலைத் திறக்கப்படும் என்றால் அது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.


ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றங்களை நாடினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளித்து மீண்டும் நாசகர ஆலையைத் திறக்க வாய்ப்புள்ளது எனவும், ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்ற அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் அன்றே கூறியிருந்ததன. அன்றே தமிழக அரசு தாமிர உருக்காலையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து ஸ்டார்லைட் ஆலையை மூட உத்தரவிட்டிருந்தால் நீதிமன்றங்கள் அந்த முடிவில் தலையிட்டிருக்க முடியாது. தவறான முடிவெடுத்து மீண்டும் நாசகர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பவதற்கு வழிவகுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகிறேன்.