மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நாட்டில் உள்ள எல்லாக் கணினிகளிலும் உள்ள விவரங்களைக் கண்காணிக்கவும், கைப்பற்றவும் உளவுத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்பு, 'ரா' உளவு அமைப்பு, சமிக்ஞை புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகிய பத்து அமைப்புகளுக்கு நாட்டின் கணினிகளைக் கண்காணிக்கும் அதிகாரத்தை பாஜக அரசு வழங்கி இருக்கிறது.
மத்திய அரசின் இந்த உத்தரவு தனிமனித, அடிப்படை உரிமைகளுக்கும் அரசியல் சாசன உரிமைக்கும் எதிரானது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. தற்போதுள்ள சூழலில் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அதிகமானோரின் வீடுகளில் கணினி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதனைக் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இதுபோன்ற செயல் தன் சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கவே பயன்படும்
.
இந்த அறிவிப்பின் மூலம் தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகச் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துள்ளது மோடி அரசு என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
எனவே, தனிமனிதனுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக உத்தரவிட்டுள்ள இந்த ஆணையை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.