திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து:  மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!

 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. 
 
திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் ஒன்பது காரணங்களைக் கூறியிருக்கிறது. இந்தக் காரணங்கள் அனைத்தும் நியாயமானவை; ஆனால் புதியவை அல்ல. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பும் இதே காரணங்கள் இருந்தன. அப்போது ஏன் இந்தக் காரணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என்ற நியாயமான கேள்வி எழும்புகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நிறுத்திய அறிவிப்பு வெளியிடும் வரையில் ஆளும் அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது ஒரு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. 
 
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதன்மூலம் தேர்தல் செலவினங்களும் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது இல்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலை நடத்துவது தான் அறிவுடைமையாகும்.