பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

பொதுப் பட்டியலில் இருக்கும் பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே சங் பரிவாரின் நீண்ட கால கோரிக்கையாகும். 2015ல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத் இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் அளிக்கப்படக் கூடாது என்றும் பொருளாதார அளவுக்கோலின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவை திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக. நாடாளுமன்றத் தேர்தலில் உயர்சாதியினரின் வாக்குகளை கவர்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இந்த முடிவு அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகள், சமூக நீதி மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது

அரசமைப்புச் சட்டத்தின் 340வின் பிரிவு இடஒதுக்கீடு சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவுள்ள இந்திய குடிமக்களுக்கு தான் இடஒதுக்கீடு அளிக்க இயலும் என்று கூறுகிறது. எனவே இடஒதுக்கீடு ஒரு வகுப்பாருக்கு தான் அளிக்க இயலுமே தவிர ஒரு வகுப்பாரில் இருக்கும் ஒரு குழுவிற்கு அளிக்க இயலாது.

அரசியல் நிர்ணயச் சபை விவாதங்களில் கல்வி மற்றும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர பொரூளாதார நிலையை இடஒதுக்கீடு அளிக்கும் ஒரு அளவுக்கோலாக எடுத்துக் கொள்ள வற்புறுத்தப்படவில்லை.

1977ல் வழங்கப்பட்ட கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் பொருளாதார நிலையை மட்டும் அளவுக்கோலாக எடுத்துக் கொண்டு இடஒதுக்கீடு அளிக்கப்பட இயலாது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இடஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டமோ அல்லது வறுமை ஒழிப்பு திட்டமோ அல்ல. வரலாற்று ரீதியாக பார்க்கும் போது அரசு இயந்திரங்களில் உயர்சாதியினர் அனுபவித்து வந்த ஏகபோகத்தை முறியடிப்பதற்கு கொண்டு வரப்பட்ட ஒரு சமூக நீதி பேராயுதமே இடஒதுக்கீடு ஆகும். ஒரு மனிதரின் பொருளாதார நிலை உயரலாம், குறையலாம் ஆனால் சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட தன்மை என்றும் மாறாது. எனவே தான் பொரூளாதார ரீதியில் இடஒடுக்கீடு அளிப்பதை நமது அரசியலமைப்புச் சட்டமும் நீதிமன்றங்களும் அங்கீகரிக்கவில்லை.

தமிழகத்தில் முன்பு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வர முயற்சித்த போது அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அதனை அவர் கைவிடும் நிலை ஏற்பட்டது. எனவே சமூக நீதியின் தொட்டிலாக இருக்கும் தமிழகம் மோடி அரசு கொண்டு வரும் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை ஒருமித்து எதிர்க்க வேண்டும். திமுக தலைவர் கோரியுள்ளபடி தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான இந்த நாசகர திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.