கூடலூர் மக்களை வாழ்விடத்திலிருந்து வெளியேற்றும் தமிழக அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஜென்மம் நிலங்கள் தொடர்பாக கடந்த 8.1.2019 அன்று  தமிழக சட்டப் பேரவையில்  'தமிழ்நாடு வன (திருத்த) சட்டம் 2019' தாக்கல் செய்யப்பட்டு தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

தமிழ்நாடு வனச்சட்டத்தின் 16வது பிரிவில் 16ஏ என்ற புதிய பிரிவை இணைத்து தமிழக அரசு  சட்டமாக்கியுள்ளது. இந்தஉட்பிரிவு 16ஏயின் படி நீலகிரி மாவட்ட நிர்வாகம், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 29,000 ஏக்கர் நிலத்தை வனத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிலங்களில் வாழ்ந்து வருபவர்கள் வீட்டுமனைப் பட்டா, விவசாய நிலப் பட்டா, மின் இணைப்பு கேட்டுப் போராடி வரும் நிலையில் இந்தச் சட்டத்தின் மூலம் அப்பகுதி மக்களை வாழ்விடத்திலிருந்து வெளியேற்றம் செய்வது கண்டனத்திற்குரியது.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் கூடலூர் பகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் 80 விழுக்காடு மக்கள் பயன்பாட்டு நிலங்களை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்ற திடீர் சட்டத்தால் அம்மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக அரசு இந்தச் சட்டத்திருத்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், 2006 ஆண்டின்- வன உரிமை அங்கீகாரச் சட்டத்தை  நடைமுறைப்படுத்தி அப்பகுதி மக்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.