ராகுல்காந்தி பங்கேற்ற ஸ்டெல்லாமேரி கல்லூரி  நிகழ்ச்சி: கல்வித்துறை நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
கடந்த 13.3.2019 அன்று சென்னை வந்திருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

இந்த நிகழ்வைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்வு தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று புகார்கள் கூறி வந்தனர். இந்த புகார்களுக்கு அன்றே பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி, இது ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்வு என்றும் இது தேர்தல் விதிமுறை மீறலாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
 
இந்நிலையில் கல்லூரி கல்வித்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் இதுபோன்ற நிகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து விவரத்தை சமர்ப்பிக்கும்படி கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு உத்தரவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இச்செயல் கண்டிக்கத்தக்கது.
 
கல்லூரி நிறுவனங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் உரையாற்றுவதும், மாணவ மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதும் ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதனடிப்படையிலேயே திரு.ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
 
சிறுபான்மையின கல்லூரி என்பதாலும், நாட்டை ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் மீது ராகுல் காந்தி வைத்த விமர்சனங்களையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்நோக்கத்தோடு அதிமுக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
 
அதிமுக அரசின் இந்த நடவடிக்கை என்பது அதிமுக பாஜக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவும் என்ற பயத்தின் காரணமாகவே எடுக்கப்பட்ட நடவடிக்கையாக மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
 
எனவே, நீண்டகால பாரம்பரியம் மிக்க ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மீதான நோட்டீஸை உடனே திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.