திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்தில் பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது கண்டனத்திற்குரியது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து மத்திய அரசு வெறும் காபந்து அரசாகச் செயல்படும் நிலையில் மத்திய பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு திமுக பொருளாளர் திரு. துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்துவது என்பது அப்பட்டமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் ஏற்படவிருக்கும் தோல்வி குறித்த பயத்திலும் விரக்தியிலும் மத்திய அரசில் இருக்கும் பாஜக, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித் துறையின் சோதனை என்ற பெயரில் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்க நினைப்பது வெட்கக்கேடானது.

இந்தியத் தேர்தல் ஆணையம் உடனே இவ்விஷயத்தில் தலையிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் வருமான வரிச் சோதனை என்ற பெயரில் சர்வாதிகார நோக்கில் எதிர்முகாம்களில் உள்ள பிரமுகர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க நினைக்கும் பாஜக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வருமான வரி திடீர் சோதனைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.