நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும், அவர்களது உரிமைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசு மூலம் வென்றெடுக்கும் அறிக்கையாகவும், நேர்மையான நடுநிலையான நிர்வாகத்தையும், மதச்சார்பற்ற அரசை உருவாக்கவும் சிறந்த பல ஆலோசனைகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது வரவேற்பிற்குரியது.

இந்த தேர்தல் அறிக்கையில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், நாட்டில் காலியாக உள்ள 4 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பப்படும் என்பதும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதும்,
நியாய் என்ற திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72000 என்பதும் , விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதும், வேளாண்மைக்கு எனும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதும், விவசாயிகளுக்கு எனத் தனியாகச் சந்தை உருவாக்கப்படும் என்பதும் வரவேற்பிற்குரியது.

வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களைப் பெரிதும் வதைக்கும் தற்போதைய சரக்கு மற்றும் சேவை கட்டண (ஜிஎஸ்டி) விகிதத்தை அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்பதும் மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ள அறிவிப்பாக உள்ளது.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் உடனடியாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு தமிழக கிராமப்புற, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசிக்கச் செய்யும் என்பதும், கல்வி மாநில பட்டியலில் சேர்க்கப்படும் என்பதும் சிறப்பிற்குரியது.

முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படும் என்பதும், புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் பாராட்டுக்குரிய அறிவிப்பாகும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக மீனவர்களுக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்படுவது மீனவர்களின் துயர் துடைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.

விவாகரத்தான, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்படும் என்பது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற உதவியாக இருக்கும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம் சிறுபான்மை சமுதாயம் உட்படச் சிறுபான்மை சமுதாயங்கள் உரியப் பங்கினைப் பெறவும், அரசியல் சாசன சட்டம் பிரிவு 15,16,25,26,28,29 மற்றும் 30 போன்றவை சிறுபான்மையினருக்கு அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் ,

கடந்த ஐந்தாண்டுகளில் மோடியின் ஆட்சியில் வெறுப்புணர்வு காரணமாக பலவீனமான மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டுள்ளது என்று குறிப்பிடும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெறுப்புணர்வு குற்றங்கள் மற்றும் கும்பல் வன்முறையை ஒழிக்க வலிமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பாராட்டுக்குரியது.

மிகவும் தவறாக மோடி ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட தேசதுரோகம் குறித்தான ஐபிசியின் 124ஏ பிரிவு நீக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதும் மெச்சத்தக்க அறிவிப்பாகும்.


வக்ப் நிலங்களைப் பாதுகாக்க உரியச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்பதும்.

பணிக்குச் செல்லும் மகளிரின் வசதிகளுக்குத் தேவைப்படும் அங்கன்வாடிகளில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்படும் என்பதும், சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போஸ்கோ நீதிமன்றங்கள் அதிகரிக்கப்படும் என்பதும்,

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான கழிவுகளுக்கும் தடை விதிக்கப்படும் என்பதும்.

மணல் கொள்ளை தடுக்கப்பட்டு ஆறுகள் காப்பாற்றப்படும் என்பதும்,
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும்.

மாநில அரசுகளுடன் இணைந்து நாட்டில் உள்ள காடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இந்தியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை அனைத்து சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதுணையாக நிற்கும் என்பதை உணர்த்துகிறது.

நாட்டு மக்களுக்கு நன்மைபயக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.