அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்வோம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி:

நாட்டின் 73வது விடுதலை திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரதீர போராட்டங்களை நடத்தி 1947ஆம் ஆண்டு இதே நாளில் நாமும் நமது நாடும் விடுதலைப் பெற்றது. ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியின் போது நமக்குக் கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டதுடன் நமது நாட்டின் வளங்களும் சுரண்டப்பட்டன. ஆங்கிலேயர்களின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியாவில் வாழ்ந்த அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டு நின்று கடும் சோதனைகளைச் சந்தித்து இறுதியில் வெற்றிபெற்று விடுதலைப் பெற்றோம்.

விடுதலையடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்காக வேண்டி அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு, நமது அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. அச்சட்டம் தனிநபர்களுக்குச் சுதந்திரத்தை அளிக்கிறது, நமது நாட்டின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கின்றது. நமது இந்திய நாடு பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி என்பதையும் கவனத்தில் கொள்கிறது.

இச்சூழலில் இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள விடுதலைப்பெற்ற இந்தியாவின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். மிகப்பெரிய தியாகத்திற்குப் பிறகு பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கத் தனிநபர் உரிமை, மாநில உரிமை, நாட்டில் வாழக்கூடிய பல்வேறு மத,இன,மொழி, கலாச்சார, பண்பாடு போன்ற உரிமைகளைப் பாதுகாக்க இந்நன்னாளில் உறுதி எடுப்போமாக.