பள்ளிகளின் மெத்தனத்தால் பறிபோகவிருக்கும் மாணவர்களின் கல்வி உதவித் தொகை! தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தேசிய அளவிலான தகுதி -வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம் (National Merit Cum Means Scholarship) 2008 மே மாதம் தொடங்கப்பட்டது. நலிந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுகிற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என்ற கணக்கில் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசுப் பள்ளி அல்லது அரசின் உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க இந்த உதவித் தொகை கிடைக்கும்.

ஆண்டுக்கு ரூபாய் பன்னிரெண்டாயிரம் உதவித் தொகையாகக் கிடைக்கக்கூடிய இந்த திட்டத்தைப் பள்ளிகள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்திலிருந்து 6000க்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் அதிகமானோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்தவர்கள்.

இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் முழு விவரங்களை ஆவணங்களாக இணையதளம் மூலம் மத்திய அரசிற்குத் தமிழக பள்ளிகள் மூலம் விவரங்களை அனுப்புவதில் தமிழகப் பள்ளிகள் மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாதம் 30ம் தேதி இந்த ஆவணங்களை அனுப்பக் கடைசி நாளாக உள்ள தருவாயில், இதுவரை தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களில் வெறும் 18 மாவட்டங்களிலிருந்து 357 மாணவர்களின் விவரங்கள் மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை விரைவில் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்து மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய முழு உதவித் தொகையையும் உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய பள்ளிக் கல்வித் துறைக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.