5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் 2019/2020 கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொதுத் தேர்வுக்கான உரிய அறிவிப்புகளை வெளியிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட இயக்குநர்களை அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதை அவசர அவசரமாகச் செயல்படுத்தும் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


விளையாட்டாகப் பாடங்களைப் படித்து புரிந்துகொள்ள வேண்டிய வயதில் அரசு பொதுத்தேர்வு எனத் திணித்து மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏற்கெனவே, போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு, அரசு பொதுத் தேர்வு எனப் பல தேர்வுகளை எழுதிவரும் மாணவர்கள் தற்போது சிறுவயதில் அரசுத் தேர்வை எழுத வைப்பது மாணவர்கள் பாரத்தைச் சுமத்துவதற்குச் சமமான செயலாகும்.
பின்லாந்து நாட்டுக்குச் சென்றுவந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பின்லாந்து நாட்டின் கல்விமுறையைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இதுபோன்ற தேர்வு முறையை கொண்டு வருவது ஏமாற்றமளிக்கிறது.


இதேபோல் சட்டமன்றப் பேரவையில் புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மத்திய அரசின் பொதுத் தேர்வு கொள்கையைத் தமிழக ஏற்றுக்கொள்ளவில்லை எனப் பதிலளித்துவிட்டு தற்போது, அதற்கு நேர்மாறாக அரசு தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பச்சைத் துரோகமாகும்.


எனவே, மாணவர்களின் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.