ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் மக்களிடையே பாகுபாட்டை கற்பிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தங்கள் வளாகத்திற்குள் அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு கல்வி வளாகத்திற்குள் காவல்துறையினர் அதனை நிர்வகிக்கும் தலைமை நிர்வாகியின் அனுமதியில்லாமல் நுழையக் கூடாது என்பதே நெறிமுறையாகும். இந்த நெறிமுறையை மீறி இந்த இரு பல்கலைகழகங்களின் துணை வேந்தர்களின் அனுமதியில்லாமல் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து காவல்துறையினரும், காவல்துறை போர்வையில் இருந்த குண்டர்களும் மாணவ- மாணவிகள் மீது வரலாறு காணாத வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள்.

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக சுற்றுவட்டாரங்களில் காவல்துறை போர்வையில் இருந்தவர்களே பேருந்துகளுக்கு தீ வைத்தாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளது திட்டமிட்டு மத்திய அரசு மாணவர்கள் மீது வன்முறைகளை ஏவியிருப்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நூலகம், பள்ளிவாசலுக்குள்ளும் காவல்துறை புகுந்து நடத்திய வன்முறைகள் மன்னிக்க முடியாத குற்றங்களாகும். இதே போல் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை காவல்துறையினரே தாக்கிய வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறைகள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை சகித்துக் கொள்ளாத மத்திய அரசின் மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றது. வரலாறு காணாத அடக்குமுறையை ஜாமியா மற்றும் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறை மூலம் கட்டவிழ்த்து விட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோருகிறேன்.