முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!!

இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக இருந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்பு சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது.

இது மதரீதியான பாரபட்சம் ஆகும். இந்த மூன்று நாடுகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் கொடுங்கோன்மைக்கு இலக்காகியுள்ளார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற இம்மசோதா வழிவகுக்கின்றது. இந்த மூன்று நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் வாழும் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தமிழர்களும் கொடுங்கோன்மைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாமல் அதிமுக இந்த சட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக செயல்பட்டுள்ளது.

நமது அண்டை நாடுகளாக உள்ள மியான்மர் மற்றும் இலங்கையைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் இந்த மசோதா கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பது மற்றொரு பாரபட்சமாகும். இலங்கையில் பவுத்த மதவாதத்தால் பாதிக்கப்பட்ட, பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் பெற்று வாழ்கிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்து நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து அதிமுக இந்த பாசிச சட்டம் நிறைவேறுவதற்கு வழிவகுத்துள்ளது.

அசாமில் பாஜக அரசு நடைமுறைப்படுத்திய தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கண்டெடுக்கப்பட்ட 19 லட்சம் மக்களில் 12 லட்சம் பேர் முஸ்லிமல்லாதவர்கள். அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் முஸ்லிம்கள் என்ற பொதுவான பிம்பத்தை இந்த புள்ளிவிவரம் தகர்த்துவிட்ட நிலையில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தவேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம்.எஸ். கோல்வால்கரின் கட்டளையை நிறைவேற்றவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தை தொடர்ந்து அசாமில் நடைபெற்றது போல் இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது நாடு முழுவதும் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கும் சதித்திட்டமாகும். கோல்வால்கரின் சதித்திட்டத்தை பாஜக இந்த சட்டத்தின் மூலம் நிறைவேற்றுவதற்கு அதிமுக துணை நின்றிருப்பது அது தன்னை திராவிடக் கட்சி என்று சொல்லி கொள்ளும் தகுதியை இழந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா, பாரத் ரத்னா எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதாவின் கொள்கைகளை பாஜகவிடம் அடகு வைத்து நாட்டை பிளவுபடுத்தும் இந்தக் கொடிய சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக காரணமாக இருந்துள்ளது..

நாட்டை மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் துண்டாடும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து அதிமுக சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. இந்த பச்சை துரோகத்தைக் கண்டித்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான திரு. எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் வரும் டிசம்பர் 18ம் தேதி மாலை 3.30 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தவுள்ளது.” இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.அனிபா, வழக்கறிஞர் பிஎம்ஆர் சம்சுதீன், துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூப், அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே. அப்துல் சலாம் மற்றும் தென்சென்னை மாவட்டத் தலைவர் கோரி என்ற அபுபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்குகொண்டனர்.