தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

என்பிஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்சிஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தவறான தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அமைச்சரவையில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமுல்படுத்தப்படும் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார். மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் இல்லாமல்தான் அமித்ஷா இந்த அறிவிப்பை செய்தாரா?

கடந்த நவம்பர் 26, 2014 அன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் டாக்டர் டி.என்.சீமா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு, “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) முதல் நடவடிக்கை” என்று கூறியுள்ளார். இதே போல் மக்களவையில் 2015 ஏப்ரல் 21 அன்று ராம்சிங் ரத்வா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்)ஐ பயன்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உருவாக்கப்படும்” என்று கூறினார்.

அமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 2019 ஜூலை 2019ல் வெளியிட்ட அரசு (கெஜட்) அறிவிக்கை தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்), குடியுரிமை 2003ல் வகுக்கப்பட்ட குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் பிரிவு (3)ன் உட்பிரிவு (4)ன் அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார். இந்த விதி 3 தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) தொடர்பானது. இந்த விதியின் உட்பிரிவு 4 தான் இந்திய குடிமக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.ஐ.சி) தயாரிப்பது குறித்த வழிவகையை செய்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய பாஜக அரசின் சதிகளை நன்கு உணர்ந்துள்ள கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகள் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. தமிழக அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

குடிமக்கள் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அரசு முறைப்படி திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் இடையில் தொடர்பு இல்லை என்பதை மத்திய அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்றும் வரையிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.