வெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை


டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள திரு. அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் அவரது ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவர்களது அமைச்சரவை சகாக்கள் 70 பேர், 13 முதலமைச்சர்கள் மற்றும் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பாஜகவிற்கு வாக்கு சேகரிக்க நடத்திய வெறுப்பு பரப்புரைக்குத் தலைநகர் டெல்லி மக்கள் தம் வாக்குகள் மூலம் தகுந்த தண்டனை கொடுத்துள்ளனர். இது வரை இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி – அமித் ஷா தரப்பினர் செய்தது போன்று மிக மோசமான தரம் தாழ்ந்த பரப்புரை நடைபெற்றது இல்லை. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை ‘பயங்கரவாதி’ என்றும் அழைக்கும் வகையில் மிகத் தரம் தாழ்ந்த பரப்புரைகள் பாஜகவினரால் செய்யப்பட்டன.


என்பிஆர் என்ஆர்சி மற்றும் சிஏஏ திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் குடியுரிமையைச் சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாற்றியுள்ள பாஜகவிற்குத் தகுந்த பாடத்தை டெல்லி மக்கள் புகட்டியுள்ளார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை புரிந்து தலைநகரில் வாழும் மக்கள் வெறுப்பு பரப்புரையையும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் மோடி – அமித்ஷாவின் விஷம சதித்திட்டத்தை தமது வாக்குகளால் முறியடித்துள்ளனர். இந்த சாதனையைப் புரிந்து டெல்லி மக்களை மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்துகிறார்கள்.


பாஜகவின் வெறுப்பு பரப்புரையை வீழ்த்துவதற்குச் சிறந்த வியூகத்தை வகுத்து மூன்றாம் முறையாக மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அர்விந்த் கெஜிரவாலுக்கு மீண்டும் எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.