மனிதநேய செயற்பாட்டாளர்கள் பொய் வழக்கில் கைது! பேரா ஜவாஹிருல்லா கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

மனித உரிமை செயற்பாட்டாளர்களான பேரா.ஆனந்த் தெல்தும்டே மற்றும் வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

1818ம் ஆண்டு ஜனவரி மாதம் மராட்டிய மாநிலம், பீமா கோரேகானில் நடைபெற்ற போரின் வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பீமா கோரேகானில் மகர் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது வழக்கம்.

இந்த வெற்றி நிகழ்வின் 200ம் ஆண்டு விழா கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவில் சமூக விரோதிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட வன்முறையை காரணம் காட்டி பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி என பொய் வழக்கு தொடரப்பட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னன் கான் சாவ்வேஸ், அருண் பெரேரா, கவிஞர் வரவர ராவ் உள்ள 9 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டனர்.

தற்போது அதே பொய் வழக்கில் பேரா.ஆனந்த், தெல்தும்டே மற்றும் கௌதம் நவ்லகா சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோடி அரசு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் காட்டும் வேகத்தைவிட மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வரும் சூழலில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவரையும் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரையும் விடுதலை செய்து அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.