பா.ஜ.க.வுடன் கூட்டணி உண்டா? தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 01

* ஏதாவது ஒரு காலகட்டத்தில் பா.ஜ.க.வை ஏற்றுக் கொள்ளும் நிலை த.மு.மு.க.வுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சூரியன் மேற்கே உதித்தால் என்ன செய்வீர்கள் என்பது போன்று அமைந்துள்ளது உங்கள் கேள்வி. நாடு விடுதலை பெற்று நாட்டில் முதலில் நடைபெற்ற காந்தியடிகள் படுகொலை, பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு, பாகல்பூர், மும்பை, குஜராத் படுகொலைகள் உள்ளிட்ட பல அதி தீவிர பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இன்றைய பா.ஜ.க., அதன் முன்னாள் வடிவமான பாரதீய ஜனசங் மற்றும் இதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஆகியவைதான் காரணமாக உள்ளன.

இதற்காக பா.ஜ.க. மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கும் அத்வானி, மோடி உள்ளிட்டவர்களை பா.ஜ.க. தண்டிக்கப் போவதும் இல்லை.

குஜராத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து குத்திக் கொலை செய்துவிட்டு, "இனி இந்தியாவில் முஸ்லீம் கரு உயிர் பெற விடமாட்டோம்' என்று பகிரங்கமாக பிரகடனம் செய்தார்கள்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்கக்கூடாது என்பதற்காக இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நபர்களைக் கொண்ட இந்தக் கட்சியுடன் மனித நேயத்தை எள் முனையளவு உள்ளத்தில் வைத்திருப்போர்கூட எப்படி கைகோர்க்க இயலும்?

 

* பெரியார் ஈ.வே.ரா. எழுதிய ஜோதிட ஆராய்ச்சி புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? எஸ். நாகப்பன், பாண்டிச்சேரி.


பெரியார் எழுதிய பல நூல்களை வாசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் நூலை நான் வாசிக்கவில்லை. ஆயினும் நண்பர்கள் மூலம் அதில் உள்ள கருத்துகளை அறிந்துள்ளேன்.

சோதிடத்தை வன்மையாகக் கண்டித்து தடைச் செய்யும் மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லீம்களுக்கு பெரியாரின் சோதிடத்திற்கு எதிரான கருத்தில் நூறு சதவிகிதம் உடன்பாடு உண்டு.

 

* குஜராத் முதல்வர் மோடியை ஏன் கரம் கட்டித் தாக்குகிறீர்கள்? த. சத்தியநாராயணன், அயன்புரம்.

உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒரு மனிதர்தான் நரேந்திரமோடி. கோத்ராவில் ரயில் எரிந்த விபத்தில் முஸ்லீம்கள்தான் கொளுத்தினார்கள் என்று பழிபோட்டு, அந்தக் காரணத்தை வைத்து முஸ்லீம் இன அழிப்பை அரங்கேற்றினார்.

முதல்வர் பதவியில் இருந்துகொண்டு குஜராத் முஸ்லீம்களைக் கொன்றொழிக்கும் பணியைக் கச்சிதமாகச் செய்தார். எந்த அளவுக்கு என்றால், அப்போது பிரதமராக இருந்த அவரது தலைவர் வாஜ்பாய்கூட, "மோடி ராஜ தர்மத்தைப் பேண வேண்டும்' என்று கண்டிக்கும் அளவுக்கு ரத்த வேட்டை நடத்தினார்.

அவரது தயவினால் மூவாயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லீம் கர்ப்பிணிகளின் வயிறு கிழிக்கப்பட்டு, சிசு குதறப்பட்டு தாயும்-சிசுவும் கொல்லப்பட்டனர். 10 பேர், 20 பேர் எனக் குடும்பம் குடும்பமாக முஸ்லீம்கள் எரிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கில் முஸ்லீம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இப்போது சொல்லுங்கள்! மோடியைக் கண்டிக்காமல் நாங்கள் கொஞ்சவா முடியும்? கோட்சே காந்தியை சுடுகாட்டுக்கு அனுப்பினான். மோடியோ, காந்தி பிறந்த மண்ணையே சுடுகாடாக்கினார்.

எங்களைப் போன்ற மனித உரிமைப் போராளிகளுக்கு அவரைப் பார்க்கும் போது ஹிட்லர், முசோலினி, ஏரியல் சேரோன் போன்றோரின் பிம்பம்தான் தெரிகிறது.

 

* ஒசாமா பின்லேடன் பற்றி தங்கள் கருத்து என்ன? ந. கரிகாலன், வேளாங்கண்ணி.

முன்னாள் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முற்பட்டபோது அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தவர் ஒசாமா பின்லேடன். இன்று அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

ஊடகங்களில் வரும் அவரது நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் உண்மையெனில் அவரது நடவடிக்கைகள் நமக்கு ஏற்புடையவை அல்ல.

 

* அத்வானி, வாஜ்பாய் ஆகியோரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன? இரா. நெடுஞ்செழியன், புதுக்கோட்டை.

அத்வானியிடம் பிடித்தது அவரது ஆங்கிலப் பேச்சு; வாஜ்பாயிடம் பிடித்தது அவரது கவிதைகள். ஆனால் இருவரும் பொய்ப் பிரச்சாரத்தில் வல்லவர்கள்.

முன்னவர் சமீபத்தில் வெளியான அவரது சுயசரிதையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த பொதுவுடமைவாதி சத்யபால் டாங்கு இறந்துவிட்டார் என்று எழுதி மாட்டிக் கொண்டார்.

பின்னவர் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்தபோது தானும் தனது சொந்த ஊரான பத்தேஸ்வரில் கைது செய்யப்பட்டதாக டைனிக் ஜாக்ரன் பத்திரிகையில் (ஆகஸ்ட் 17, 1997) எழுதினார்.

ஆனால் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய லீலாதர் பாஜ்பாய் என்ற விடுதலைப் போராட்ட வீரர். ""எங்களையெல்லாம் காட்டிக் கொடுத்துவிட்டு வாஜ்பாய் விடுதலை ஆனார்'' என்று பத்திரிகைகளுக்கு அறிக்கையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வாஜ்பாயின் பொய் முகத்தைக் கிழித்தார்.

 

* இஸ்லாமியர்களை நாட்டுப்பற்று இல்லாதவர்களாக சித்தரிக்கும் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என். நம்பிராஜன், செஞ்சி.

மிகவும் மனவேதனை அடைகிறேன். இந்நாட்டின் விடுதலைக்காக ஹிந்து சமுதாயப் பெருமக்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய சமுதாயம் முஸ்லீம் சமுதாயம்.

போர்ச்சுகீசியர்கள் கேரளா கரையோரம் கப்பலில் படையெடுத்து வந்த போது சாமுத்திரி மன்னரின் கடற்படை தளபதியாக விளங்கிய குஞ்ஞாலி மரைக்காயர் முதற்கொண்டு, வேலூர் கோட்டையில் 1806ல் நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம், 1857ல் நடைபெற்ற சிப்பாய் கலகம் என்று தவறுதலாக அழைக்கப்படும் போர், காந்தியடிகளின் அகிம்சை போராட்டம் மற்றும் நேதாஜியின் ஆயுதப் போராட்டம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் பிற இந்திய மக்களுக்கு எவ்வகையிலும் சளைக்காமல் தியாகம் செய்த சமுதாயம் முஸ்லீம் சமுதாயம். கார்கில் போரில்கூட டைகர் மலையில் நடைபெற்ற இறுதித் தாக்குதலில் பாகிஸ்தானியர்களை வீழ்த்தியது முஸ்லீம் வீரர்கள் அடங்கிய பிரிவுதான்.

இந்த உண்மைகளை பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் சொல்லிக் கொடுப்பதில்லை; ஊடகங்களிலும் முதன்மைப் படுத்தப்படுவதில்லை. தவறான சித்திரம் தான் வரையப்படுகிறது.

முஸ்லீம்கள் நவீன இந்தியாவின் அனைத்து வகையான முன்னேற்றத்திற்கும் தூய்மையான எண்ணத்துடன் உழைத்து வருகின்றார்கள். வளைகுடாவில் பணியாற்றும் நமது நாட்டைச் சேர்ந்த பெரும்பகுதியான முஸ்லீம்களின் உழைப்பினால் அதிகமான அந்நியச் செலாவணியை நமது நாடு இன்றும் பெற்று வருகின்றது. எனவே முஸ்லீம்களின் நாட்டுப்பற்றைப் பற்றி யாரிடமும் சான்றிதழ் பெறத் தேவையில்லை.

 

* இந்தியாவில் ஒரு முஸ்லீம் பிரதமர் ஆனால் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? ந. தாமோதரன், மதுரை.


நமது நாட்டில் மூன்று குடியரசுத் தலைவர்கள் முஸ்லீம்களாக இருந்துள்ளார்கள். அப்போது பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கேரளா, மராட்டியம், புதுச்சேரி, பீஹார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லீம்கள் முதலமைச்சர்களாக இருந்துள்ளார்கள்.

அங்கே குஜராத்தில் 2002ல் நடைபெற்றது போன்ற படுகொலைகள் அரங்கேறவில்லை. எனவே நாட்டின் பிரதமராக முஸ்லீம் ஒருவர் வந்தாலும் ஹிந்துக்களின் பாதுகாப்பிற்கு எவ்விதப் பங்கமும் ஏற்படாது.

மேலும் தனது மார்க்கத்தை சரி வரக் கடைபிடிக்கும் ஒரு முஸ்லீம் நாட்டின் பிரதமராக வந்தால் ஹிந்துக்கள் உட்பட அனைவரும் மேலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஏனெனில் இஸ்லாம் அனைத்து சமூகத்தாருடன் நல்லிணக்கம் பேணி ஆட்சி நடத்தவே வலியுறுத்துகின்றது.

இதனால்தான் இந்தியா விடுதலைப் பெற்றவுடன் காந்தியடிகள், ""கலீபா உமரைப் போன்று ஆட்சி செய்ய விரும்புகிறேன்'' என்று கூறினார்.

கலீபா உமர் ஆட்சி செய்த போது அவரது குடிமக்களாக இருந்த யூதர்களும், கிறித்துவர்களும் முழுமையான பாதுகாப்புடனும், உரிமையுடனும் வாழ்ந்து வந்தார்கள்.

 

* சச்சார் கமிட்டி அறிக்கை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா? எஸ். கபீர், சேலம்.

நடைமுறைப்படுத்துவோம் என்று சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இன்னும் விரிவான முறையில் சச்சார் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

 

* சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போது உங்கள் உணர்வு எப்படியிருந்தது? ந. முகமது காஸிம், சிந்தாதிரிப்பேட்டை.

 

அமெரிக்க அராஜகத்தை இன்னும் வலிமையாக மக்களிடையே தோலுரிக்க வேண்டும் என்ற உணர்வு வலிமையாக உள்ளத்தில் குடிக்கொண்டது.

 

தமிழன் எக்ஸ்பிரஸ் 28.04.2008, கேள்வித் திருவிழா