ரம்ஜான் பிரியாணியும், தீபாவளி பலகாரமும்..! தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 02

Ω சுயநலம் இல்லாத மாமனிதர்களை இன்றைய சமுதாயத்தில் காண முடிகிறதா? கு. சரவணன், கே.கே.நகர், சென்னை

சுயநலம் இல்லாத மாமனிதர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் காண முடிகிறது. இத்தகைய ‘மாமனிதர்கள்’ அரிதாகவே இருக்கிறார்கள். நாம் வாழும் சமகால உலகம் பணத்திற்கும், சுகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கும் பண்புக்கும், நேர்மைக்கும் கொடுப்பதில்லை. அதனாலேயே அரிதாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுயநலமில்லாத மாமனிதர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று அழைக்கப்படுவதுடன் அவர்கள் கண்டுகொள்ளப்படாமலும் இருக்கிறார்கள்.

Ω மதமாற்றம் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய பெருங்குற்றமா? வா. ராஜன், திண்டிவனம்

‘மதமாற்றம் ஏன் நிகழ்கிறது? என்பதை அந்ததந்த மதத்தின் ஆன்மீகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமமான வழிபாட்டுரிமை ஏழை&எளியவர்களுக்கு மறுக்கப்படும்போது, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்குள் ஜாதி, இனப் பாகுபாடுகள் கடை பிடிக்கும்போது மனமாற்றமும், மாற்றுச் சிந்தனைகளும் இயல்பாகவே உருவாகும். அது சிலரை நாத்திகத்துக்கும், பலரை மதமாற்றத்திற்கும் தூண்டுகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை மாற்றத்தையும், முடிவெடுக்கும் உரிமையையும் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதனை உறுதிச் செய்யும் வகையில்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும்தான் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும். மதமாற்றம் ஒரு குற்றமல்ல. அது, தனி நபரின் சுதந்திரம் மற்றும் உரிமையாகும்.

Ω தேர்தல் காலங்களில் மட்டுமே பெருன்பான்மையான அரசியல்வாதிகளுக்கு சிறுபான்மை அமைப்புகளின் நினைவு வருவது எப்படி? எம். சம்பத், வேலாயுதம்பாளையம்

பெரும்பாலான அரசியல்வாதிகள் தேர்தல்களை மட்டுமே சிந்திக்கிறார்கள். சமூகச் சிந்தனையும் பொறுப்புணர்வும் கொண்ட ஒரு சில அரசியல்வாதிகள்தான் சமூக நீதியையும், நல்லிணக்கத்தையும், அனைத்து மக்களின் முன்னேற்றத்தையும் பற்றிச் சிந்திக்கிறார்கள். முதல்வகை நபர்கள் தேர்தல் வரும்போது எங்கள் அலுவலகங்களுக் கும் வருகிறார்கள். இரண்டாவது வகை நபர்கள் தேர்தல் முடிந்த பிறகும் எங்களோடு உறவோடும், பரிவோடும் இருக்கிறார்கள். முதல்வகை நபர்களை வீட்டு வாசலில் வைத்திருப்போம். இரண்டாவது வகை நபர்களை வீட்டிற்குள் அழைத்து உறவினர்களைப் போற்றுவோம். முதல்வகை நபர்கள் எங்கள் பலத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இரண்டாவது வகை நபர்கள் எங்கள் மனதைப் படிக்கிறார்கள்.

Ω மாமன்,மச்சான்,மாப்பிள்ளை என்று உரிமையோடு பாசத்தோடும் பழகி வந்த மக்கள், மதத்தால் பிளவுபடும் போது என்ன நினைக்கிறீர்கள்? கலைப்பிரியா, வேலூர் (நாமக்கல்)

மனம் வெதும்புகிறேன். மதங்கள் மனிதனை நெறிப்படுத்த வந்தவை. எந்த மதமும் அடுத்த மதத்தோடு மோதல் போக்கை ஊக்குவிக்க அறிவுறுத்தவில்லை. யாரோ சில விஷமிகள் மேலிடங்களில் அமர்ந்து கொண்டு தூண்டிவிடுகிறார்கள். அப்பாவிகள் இதற்கு பலியாகிறார்கள். எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரம்ஜான் பெருநாள் வந்துவிட்டால், தங்கள் இந்து நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று பிரியாணி கொடுக்கும் முஸ்லிம்களைப் பார்க்கலாம். தீபாவளி வந்துவிட்டால் சாமிக்குப் படைக்காத பலகாரங்களையும், இனிப்புகளையும் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளுக்கு ஓடிவரும் இந்துக்களைப் பார்க்கலாம். இப்படித்தான் கிறிஸ்தவர்களின் நேசமும் இருக்கிறது.

இந்த மாசற்ற உறவைப் பாழ்படுத்த நினைக்கும் வேதனையும், கோபமும்தான் பீறிட்டு வருகிறது. நல்லவேளையாக வட இந்தியாவைப் போல மோசமாக நமது தமிழ்நாடும், அண்டை மாநிலங்களான கேரளாவும், புதுச்சேரியும் இல்லை என்பது ஒரு ஆறுதலாகும்.

Ω அரசியலில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை வரவேற்கிறீர்களா? எல். சுரேஷ், ஆவடி

வரவேற்கிறேன். அவர்கள்தானே சமூகத்தின் எதிர்காலத் தூண்கள். அவர்களிடம் சமூகச் சிந்தனையும், நேர்மையான அரசியல் பார்வையும் உருவானால் நாடு நன்றாக இருக்கும். ஒரு காலத்தில் தமிழக அரசியலை புரட்டிப் போட்டு இந்தியாவுக்கே முன் மாதிரியாக தமிழக மாணவர்கள் சமுதாயம் விளங்கியது. இப்போது அப்படியில்லை. மாணவர் இயக்கங்கள் பலம் குன்றி இருக்கின்றன. இது தவறில்லை. ஆனால் சமூகச் சிந்தனையும், போர்க்குணமும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற பொதுநலமும் மிகக் குறைவாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். ஒரு கல்லூரி ஆசிரியர் என்ற அளவில் நான் அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல முயற்சிகளைச் செய்து வருகிறேன்.

Ω அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எவ்வகையில் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்-? ஏ.கே. நாஸர், திருப்பட்டிணம்

பா.ஜ.க தலைமையிலான ஆதிக்கவாத ஆட்சி அமையக்கூடாது. சமூகநீதி, சமூக நல்லிணக்கம் ஏழை மக்களின் முன்னேற்றம், விவசாயிகளுக்கும், விவாசயத்திற்கும் புதிய திட்டமிடல், தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சிகளை கிராமங்களுக்குப் பரவலாக்குதல், உலகமயமாக்கல் கொள்கையின் விளைவுகள் நமது நாட்டின் சாமனிய மக்களைப் பாதிக்காத வகையில் திட்டங்கள், வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க ஏகாதிப்பத்திற்கு அடிமை சாசனம் எழுதாத நிலை போன்ற சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கூட்டணி ஆட்சி மலர வேண்டும். அந்தக் கூட்டணி ஆட்சி இடதுசாரிகளின் தயவோடு அமைய வேண்டும். இது எமது ஆசை மட்டுமல்ல... பிரார்த்தனையும் கூட.

Ω மதங்களின் தோற்றம் எப்போதைய காலம் ஐயா? மே.பா. இளங்கோ, கௌந்தப்பாடி

உலகின் முதல் மனிதரின் பெயர் ஆதாம் என்கிறது பைபிள். அவரை முதல் மனிதர் மட்டுமல்ல, முதல் இறைத்தூதரும் (நபியும்) கூட என விளக்கமளிக்கிறது திருக்குர்ஆன். அது முதலே மதத்தின் தோறறம் உருவாகி விட்டது. ஆதாம் பின்பற்றிய மதம், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கை உடையது. இடையில் பல்வேறு நபிமார்கள் (இறைதூதர்கள்) வருகை தந்து, மக்களிடம் நீதிபோதனை செய்திருக்கிறார்கள். நபி மூஸா (மோசஸ்) அவர்களை யூதர்களும், நபி ஈஸா (இயேசு) அவர்களை கிறிஸ்தவர்களும் பின்பற்றுகிறார்கள். இவர்களின் தொடர்ச்சியாக இறுதியாகப் பிறந்தவர்கள்தான் நபிகள் நாயகம் என போற்றப்படும் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.
இந்த வரிசையில் சேராத ராமர், புத்தர் ஆகியோர் முறையே இந்து மற்றும் பௌத்த மதங்களின் முன்னோடியாக இருக்கிறார்கள். இம்மதங்கள் பண்டைய லெமூரியா மற்றும் பண்டைய இந்தியாவின் வரலாற்றோடு சார்ந்திருக்கின்றன. ஒரு முக்கியமான செய்தி என்னவெனில் மனிதன் தோன்றியபோதே மதம் தோன்றிவிட்டது. தோன்றிய எல்லா மதங்களும் ஆசியா கண்டத்தில்தான் பிறப்பெடுத்துள்ளன.

Ω மது விலக்கை அமல்படுத்தி, இழப்பிற்கு வரி விதித்து சமமாக்க இயலாதா? பிரவீன், சென்னை

ஏன் முடியாது-? மதுவினால் ஒராண்டுக்குக் கிடைக்கக்கூடிய வருவாய் எவ்வளவு என்பதை மட்டுமே அரசு பார்க்கிறது. அதனால் ஏற்படும் பண்பாடு, கலாசார மற்றும் உடல் ஆரோக்கியச் சீரழிவுகள் பற்றி சிந்திக்காமல் மக்களின் ஆரோக்கியத்திற்கும், கலாசார பாதுகாப்புக்குமே அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.

மது அருந்தும் ஒருவருக்கு ஏற்படும் ஆரோக்கியச் சீர்கேடுகளின் பட்டியலைப் பாருங்கள்.

. குடல் அதன் செயல்பாடுகளை படிப்படியாக இழந்து விடுகிறது.

. பசியை மது அருந்துபவன் துறக்கிறான்.

. முகத்தின் அழகிய தோற்றம் விகாரமாகின்றது.

. சீக்கிரம் முதுமை வருகின்றது.

.தெளிவான பேச்சாற்றல் மற்றும் சீரிய சிந்தனை ஆற்றலை மனிதன் இழக்கிறான்.

. இதயம் பழுதாகின்றது.

. பெற்றெடுக்கும் குழந்தையும் பலவீனமானதாகப் பிறக்கிறது.

. மக்களிடையே பகைமையும், சண்டைச் சச்சரவும் ஏற்படுகின்றன.

மருத்துவ ஆய்வாளர்கள் மதுவின் கேடுகள் குறித்து அளிக்கும் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று குறிப்பிட்டார்கள். டாக்டர் எம். ராபர்ட்சன் என்ற அறிஞர் மதுக்கடைகள் அரசு மூடினால் நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளில் பாதியை மூடமடியும் என்று உத்தரவாதம் அளிக்கிறார். இந்த வகையில் தமிழகத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர். எஸ். ராமதாஸ் அவர்கள் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று வைத்த கோரிக்கையில் எங்களுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு உண்டு.

எத்தனையோ அரசியல்£ புரட்சிகளைச் செய்த டாக்டர் கலைஞர் அவர்கள் மதுவிலக்கை அமல்படுத்தினால், வரலாற்றல் கூடுதல் முக்கியத்துவம் பெறுவார். தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமையும். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை, திட்டமிட்ட விவசாய மேம்பாடுகள் மூலமும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மூலமும் நிச்சயம் பெற முடியும். மதுவிலக்கினால் ஏற்படும் வரி இழப்பு உண்மையில் இழப்பு அல்ல. கூடுதலான, திறமையான, மதுவின் தீமைகளில் இருந்து விலகிய மனிதர்களின் ஆற்றல் நமது மாநிலத்தின் வருவாய் பெருகுவதற்கே வழி வகுக்கும்.

Ω நேரத்தை கடைபிடிப்பதில் நீங்கள் எப்படி? கலை, கடலூர்

திருக்குர்ஆனின் சிறிய அத்தியாயம் ஒன்று, ‘காலம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. னீந்த அத்தியாயம், ‘காலத்தின் மீது மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்’ என்று தொடங்குகின்றது. வழக்கமாக ‘காலம் பொன் போன்றது’ என்று தொடங்குகின்றது. ஆனால் இந்தக் கருத்து தவறானது. ஏனெனில் இழந்துவிட்ட செல்வத்தை மீண்டும் உழைத்துப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இழந்துவிட்ட காலத்தை ஸ்த்தனை கோடி பொன் கொடுத்தாலும் மீட்க முடியாது என்பதை இந்த திருக்குர்ஆன் னீத்தியாயம் சுட்டிக்காட்டுகின்றது. வெட்டியாகக் கழிகின்ற ஒரு நிமிடத்தின் மூலம் நமது வாழ்வின் ஒரு நிமிடத்தை இழந்துவிடுகிறோம் என்ற எண்ணத்தை எனக்குள் நிலை நிறுத்தி வாழ முயன்று வருகிறேன். இதேபோல் பிறரது நேரமும் விலை மதிப்பற்றது என்பதை நினைவில் கொண்டு வாழ முயலுகிறேன்.

Ω உங்களைப் பற்றி பிறர் அவதூறு கூறும்போது நீங்கள் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்? அஸாருதின், சென்னை-114

நான் விமர்சனங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவன். ஆனால் அவதூறைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. காரணம், நிச்சயம் ஒருநாள் அம்பலப்பட்டுப் போய்விடும் என்பதை உறுதியாக நம்புகவன்நான். நாம் இறைவனுக்கு அஞ்சி, மனசாட்சிப்படி வாழும்போது அவதூறுகள் நம்மை எதுவும் செய்துவிடாது. காரணம், அவதூறுகளுக்கு எப்போதும் தாற்காலிக வெற்றிதான் உண்டு.

கேள்வித் திருவிழா (01.05.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)