தேர்தலுக்கு தனிக்கட்சி தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 04

♥ இந்து மதம் மட்டும்தான் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? நா. குமரேசன், குமாரபாளையம்

இந்து மதம் என்பதே இடைக்காலத்தில் இடப்பட்ட பெயர்தான். சைவம், வைணவம், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் எனப் பல்வேறு போக்குகளை உடைய வைதீக மதம் பின்னாளில் இந்துமதம் என அறியப்பட்டுள்ளது.

‘அன்பே சிவம்’ என்ற கோட்பாடும், விவேகானந்தரின் கருத்துகளும், ராமானுஜரின் சமத்துவ வேட்கையும் இந்து மதத்தின் சகிப்புத்தன்மைக்குச் சான்றுகள் ஆகும். ஆயினும் சைவத்தின் பெயரால் எட்டாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொரமாகக் கொலை செய்தும், நாடெங்கும் இருந்த பௌத்த விகாரங்களைச் சூறையாடியதும், சமண, பௌத்தச் சமயத்தினர் மீது கொடும் வன்முறைகளை நிகழ்த்தியதும் கடந்த காலத்தில் இந்து மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய சகிப்புத் தன்மையின்மைக்கு எதிரான புரட்சியைத்தான் மகாவீரரும், கௌதம புத்தரும் செய்தார்கள்.
ஆஸ்திரேலியா பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ்ஸையும், அவரது பச்சிளம் பாலகர்களையும் உயிரோடு எரித்தது: பசுவை அறுத்தார்கள் என்பதற்காக ஐந்து தலித்கள் ஹரியானாவில் உயிருடன் எரிக்கப்பட்டது; மத்தியப் பிரதேசத்தில் ஜபுவாவவில் கிறிஸ்துவப் பெண் துறவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு இலக்கானது; பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; குஜராத் கலவரங்கள்; கீழ வெண்மணி, மேலவளவு உள்ளிட்ட சமகாலக் கசப்பான சம்பவங்களும் சகிப்புத் தன்மையைப் பற்றிப் பேசும் போது நம் நினைவுக்கு வருகின்றன. சிதம்பரம் கோயிலில் தமிழில் இசைபாடச் சென்ற ஓதுவார்கள் அங்கு எப்படிச் சகித்தார்கள் (?) என்பதையும் பார்த்தோம். எனவே, மதத்தில் இருக்கும் மனிதர்களின் செயலை வைத்து தான் சகிப்பையும், சகிப்பின்மையும் முடிவு செய்ய வேண்டும்.

♥ அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும்? தலையாய தகுதி என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? ஏ.கே. நாஸர், திருப்பட்டிணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை சமூக சேவர்களான தனது தோழர்களிடம் ‘உங்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று தெரியுமா? என்று கேள்வி எழுப்பிவிட்டு, பிறகு அதற்கான விடையையும் அளித்தார்கள். ‘ஒரு மனிதனைப் பார்க்கும்போது, இவர் நல்லவர், நமக்கு உதவி செய்வார், இவர் நமக்குப் பாதுகாப்பு அளிப்பார்’ என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்பட்டால் அவர் நல்லவர். ஒரு மனிதரைப் பார்க்ககும்போது, ‘இவர் கெட்டவர். இவர் நமக்குத் தீமைகளைச் செய்யக் கூடியவர்; என்ன கேடு நமக்கு இவரால் வரப் போகின்றதோ? என்ற எண்ணம் ஏற்பட்டால் அவர் கெட்டவர்’ என்று நபிகள் நாயகம் வரைவிலக்கணத்தை வகுத்துத் தந்தார்கள். இந்த அடிப்படையில் ஒரு அரசியல்வாதியைப் பார்த்தால் அவர் நல்லவர், நமக்கு உதவியிடக் கூடியவர் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களின் உள்ளத்தில், ஏற்படும் அளவிற்கு அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். தன்னலமற்ற சேவையை மக்களுக்கு ஆற்ற வேண்டும் என்ற மனப்போக்குதான் தலையாயத் தகுதியா இருக்க வேண்டும்.

♥ தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடுமா? இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேர்த்தலில் போட்டியிடாது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்கென ஒரு தனி அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். அந்தக் கட்சிக்கான விதிமுறைகளைத் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. பொது வாழ்வில் தூய்மை, வாய்மை, ஒழுக்கம் முதலிய அழகிய பண்புகளை நிலைநாட்டும் உறுதியைக் கொண்ட நிர்வாகிகளைக் கொண்டு, அரசியல் அரங்கில் புதுமைகளைப் படைக்கும் வகையில் இந்த அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

♥ சிறுபான்மை கல்வி நிலையங்களில் அட்மிஷன்கள் முறைப்படி நடக்கின்றன என்று உங்களால் உத்தரவாதமிட்டுச் சொல்ல முடியுமா-? எஸ். முகுந்தன், திருவண்ணாமலை

முறைப்படி என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரசு மானியம் பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் மாணவர்கள் பாரபட்சமின்றிச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் அரசு உதவி பெறும் முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் முஸ்லிம் மாணவர்கள் சிறுபான்மையாகத்தான் இருக்கின்றார்கள். அந்த அளவிற்கு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகின்றன. ஆனால் சுயநிதி அடிப்படையில் இயங்கும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை வர்த்தக நிறுவனங்களாகத்தான் இருக்கின்றன.

♥இந்து மதத் தலைவர்களில் (அரசியல் தலைவர்கள் அல்ல) உங்களின் சிறந்த நண்பர்கள் யார்? அவர்களில் ஒருவருடன் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்ல முடியுமா? நா. கதிரேசன், வேலாயுதம்பாளையம்

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுவாமி அக்னிவேஷ் என்று பலரைச் சொல்லலாம். இவர்களில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருடன் சில மாதங்களுக்கு முன்பு, நாகை மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன், நன்றாகத் தனது உரையை தயாரித்து சுவையான தகவல்களுடன் அவர் ஆற்றிய உரை என்னைக் கவர்ந்தது. தனது உரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சமூகச் சேவைகைள மேற்கோள் காட்டி அவர் உரையாற்றியது என்னை நெகிழ வைத்தது.

♥ ஒகேனககல் குடிநீர் திட்டத்தைத் தாற்காலிகமாகக் கலைஞர் நிறுத்தி வைத்துள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன-? உமரி பொ. கணேசன், மும்பை

கலைஞர் பழுத்த அனுபவமுள்ள முதல்வர். உணர்ச்சிகளுக்கு பலியாகிவிடக் கூடியவர் அல்ல. இது மிகந்த பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட்ட முடிவு. அதே நேரத்தில் கலைஞர் தமிழகத்தின் உரிமைகளை ஒரு எள்முனையளவுகூட விட்டுக் கொடுக்க மாட்டார். கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும்; பிறகு இப்பிரச்சினைக்க நல்ல முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

♥ நாட்டிற்கு எத்தகைய வளர்ச்சி விரும்பத்தக்கது? வீரா, பாண்டி

தற்போது நாட்டில் செல்வந்தர்கள் மேன்மேலும் செல்வந்தர்களாக ஆகி வருகிறார்கள். உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளார்கள். இதே நேரத்தில் அடுத்தவேளை உணவுக்கு அவதிப்படும் ஏழைகளும் நாட்டில் குறைந்தபாடில்லை. இதற்கு நேர் மாறாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களும் பயனடையக் கூடிய வளர்ச்சி, நமது நாட்டிற்குத் தேவை.

கேள்வித் திருவிழா (08.05.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)