கதம்ப மாலைத் தோட்டம்! தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 06

முஸ்லீம்கள் ஜிஹாது என்கிறார்களே.... அதன் அர்த்தம் என்ன? ஆர். சுப்பிரமணியன், வேலூர்.

ஜிஹாது என்ற அரபிச் சொல்லுக்கு முயற்சி, பாடுபடுதல் என்று பொருள். "ஜிஹாது செய்தல்' என்றால் ஒரு லட்சியத்தை அடைவதற்காக முயலுதல், ஈடுபாடு காட்டுதல் என்று கூறலாம். ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெறுவதற்காகக் கடுமையாக முயற்சி செய்தால் அதுவும் ஜிஹாதுதான்.

ஒரு தொழிலாளி தனக்கு அளிக்கப்பட்ட பணியைச் செவ்வனே முடித்து தனது முதலாளியின் திருப்தியைப் பெறுவதற்காக எடுக்கும் முயற்சியும் ஜிஹாது தான். எனவே ஜிஹாது என்ற இந்தப் பதத்தை முஸ்லிம்களும் பயன்படுத்தலாம்; முஸ்லிம் அல்லாதவரும் பயன்படுத்தலாம்.

தனது மனோ இச்சைக்கு எதிராகப் போராடுவதுதான் மிகப் பெரும் ஜிஹாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அடக்குமுறைகள் மற்றும் கொடுங்கோன்மைகளுக்கு இடையே தனது மார்க்கத்தைப் பின்பற்ற ஒரு முஸ்லிம் எடுக்கும் முயற்சிக்கும் ஜிஹாது என்று பெயர் உண்டு. கொடுமைக்கார அரசனுக்கு முன்பு நியாயத்தை எடுத்துரைப்பதும் ஜிஹாதுதான்.

இதேபோல் தனது சமூகம் தாக்கப்படும்போது வேறு வழியின்றிக் கடைசி ஆயுதமாகத் தற்காப்பிற்காகப் போரிடுவதும் ஜிஹாதுதான். ஆனால் இத்தகைய போர்கூடத் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற அடிப்படையில் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அதிகாரமுள்ள, அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத் தலைமையின் உத்தரவின் பேரில்தான் இந்தப் போர் நடத்தப்பட வேண்டும். இப்படிப் போரிடும்போதும் கூட சில தெளிவான நெறிமுறைகளை இஸ்லாம் வகுத்தளித்துள்ளது. போர் முனையில் கூடப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மத குருமார்களைத் தாக்கக்கூடாது.

மரங்கள், செடி கொடிகள், நீர்நிலைகள் முதலியவற்றுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்று தெளிவாக இஸ்லாம் வரையறுத்துள்ளது. இந்த விதிமுறைகளுக்கு முரணாக அப்பாவிகளைக் கொன்று குவிப்பதை ஜிஹாது என்று கருதுவது பெரும் பாவமாகும். ஜிஹாது என்பதை மேற்கத்தியர்கள் "புனித யுத்தம்' என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

இது முற்றிலும் தவறானதாகும். புனித யுத்தம் என்ற அர்த்தத்தில் இஸ்லாத்தின் மூல நூல்களான திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றில் ஜிஹாது என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. தேவையில்லாமல் போரைத் தொடங்குவது புனிதமற்ற செயல் என்கிறது இஸ்லாம்.

அண்மையில் உங்களைப் பாதித்தது யாருடைய பேச்சு? ராஜப்பன், ராஜபாளையம்.

அமெரிக்க அதிபர் போர்வையில் வீற்றிருக்கும் உலக மகா பயங்கரவாதி ஜார்ஜ் புஷுடைய பேச்சு.

இந்தியாவில் 35 கோடி மக்கள் மத்திய வர்க்க மக்களாகக் கருதப்படுவதாகவும், இந்த இந்திய மத்திய வர்க்க மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமானதாகும் என்றும் பேசிய அந்தப் பயங்கரவாதி,

இவர்களிடம் செல்வம் அதிகரித்து வருவதாகவும், எனவே அவர்கள் அதிகமாகச் சாப்பிடுவதாகவும், இதன் விளைவாகத் தான் விலையேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இந்தியர்களின் தன்மானத்தைப் பாதிக்கும் வகையில் கூறியுள்ளார்.

இந்த வாய்க்கொழுப்பு உடைய பேச்சுக்கு உடனடியாகச் சாட்டையடி கொடுக்காமல் மெüனம் காக்கும் நமது பிரதமரின் போக்கு என்னை மேலும் பாதித்தது.

மூட நம்பிக்கைகளை ஒழித்துக்கட்டத்தானே மதங்கள் தோன்றின. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது பற்றி தங்கள் கருத்து? லெமூரியன், திருவண்ணாமலை.

யார் சொன்னது மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்ட மதங்கள் தோன்றின என்று. எனவே நிலைமை தலைகீழாக மாறியது ஆச்சரியத்திற்குரியது அல்ல.

இஸ்லாத்தைப் போன்ற ஒரு சில மதங்களைத் தவிர மற்ற மதங்களின் அடித்தளமே மூட நம்பிக்கைகள்தான். சோதிடம் உள்ளிட்ட அனைத்து மூட நம்பிக்கைகளையும் கடுமையாக எதிர்க்கின்றது இஸ்லாம்.

இந்தியா முழுக்கவே அமைதிப் பூங்காவாக விளங்கிட தாங்கள் கூறும் ஆலோசனை என்ன? அ, சுகுமார், காட்டுக்கானூர்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் தனித்தன்மை.

பிற சமயத்தவர், மொழியினர், மாநிலத்தவர் மற்றும் கொள்கையுடையவர்களின் கருத்துகளுடன் உடன்படாவிட்டாலும் அவர்கள் அந்தக் கருத்தில் இருப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை அனைத்து இந்தியர்களும் மனதளவில், செயல் அளவில் ஏற்றுக் கொண்டு நடந்து கொண்டால் இந்தியா அமைதிப் பூங்காவாகத் திகழும்.

இந்தியா என்பது ஒரு மலர் மட்டும் பூத்துக்குலுங்கும் தோட்டம் அல்ல. இது ஒரு கதம்ப மாலைத் தோட்டம் என்பதை ஆட்சியாளர் முதல் ஆண்டிவரை உணர்ந்து செயல்பட்டால் அமைதிக்குப் பங்கம் வராது.

நம் கல்வி முறையில் கோளாறு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? எஸ். சாகுல் அமீது, நாகூர்.

நிச்சயமாக. நமது கல்வி முறையில் தலைகீழ் மாற்றம் தேவை. 3 வயது குழந்தையைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது முதல், மனப்பாடத் திறன் அடிப்படையில் மாணவர்களின் கல்வி தகுதியை மதிப்பீடு செய்யும் முறை வரை மாற்றப்பட வேண்டும்.

தாய் மொழியில் கல்வி கற்பிக்கப்படும் நிலை கொண்டு வரப்பட வேண்டும். இது போன்ற செயல்முறை மாற்றங்கள் மேலும் திறமையான இந்தியர்களை உருவாக்க உதவும்.

கேள்வித் திருவிழா (20.05.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)