உதிராத நினைவுகள்! தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 08

உங்கள் பள்ளி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் இவர்களில் உங்கள் வாழ்க்கையோடு கலந்துவிட்டவர்கள் யார்? ஏன்?  என். இப்ராஹீம், கீழ்வேளூர்.

நான் படித்த சென்னை, அரண்மனைக்காரன் தெரு, செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்திய பள்ளிக்கூடத்தில் எனக்கு ஆசிரியராக இருந்த திரு. சாலைபாதர் என் வாழ்க்கையோடு கலந்துவிட்டவர்.

நான் இன்று ஒரு மேடைப் பேச்சாளராக இருப்பதற்கும், பல பொருட்களைப் பற்றி விவாதம் புரிய ஓரளவு ஆற்றல் பெற்றதற்கும் இவரது வகுப்புகள் பெரிதும் காரணமாக இருந்தன.

இவர் பல பாடங்களை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். இவரது வகுப்புகள் வித்தியாசமானதாக இருக்கும். வகுப்புகளில் மாணவர்களிடையே பேச்சுப்போட்டி விவாதங்கள் அடிக்கடி நடைபெறும். அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டேன். இன்றும் அந்த வகுப்புகள் என்றும் உதிராத நினைவுகளாக என் உள்ளத்தில் நிறைந்துள்ளன.

இந்த வரிசையில் நான் புதுமுக மற்றும் பட்டப்படிப்பு படித்த புதுக்கல்லூரியில் வணிகக் கணக்குப் பாடம் நடத்திய வி.எல். சாஹித் அவர்களையும் என்னால் மறக்க முடியாது. வணிகக் கணக்கு பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் கல்லூரியில் சேர்ந்த எங்களுக்கு அவர் பாடம் நடத்திய விதம் அதியற்புதமாக அமைந்தது.

பிறகு கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அவரது பாணியிலேயே நானும் பாடம் நடத்தி வருகிறேன்.

சமீபத்தில் நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வைச் சென்னை புதுக்கல்லூரி பொருளாதாரத் துறையில் செய்தபோது எனது ஆய்வு நெறியாளராக இருந்த முனைவர் ஏ.அப்துல் ரஹீமையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

என்னைவிட வயதில் குறைந்தவரான இந்த இளைஞர் ஒரு சிறந்த பொருளாதார மேதையாக விளங்குகிறார். வட்டியில்லாத வங்கி தொடர்பாக ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது எனது நீண்ட கால இலட்சியம்.

அது நிறைவேற முனைவர் அப்துல் ரஹீம் அவர்களது வழிகாட்டல் எனக்கு பெரிதும் உதவியது. இனி தொடரும் எனது ஆய்வுகளுக்கு படிக்கட்டாக அமைந்த எனது பி.ஹெச்.டி. நெறியாளரை நான் எப்படி என் வாழ்விலிருந்து பிரிக்க இயலும்.

தீவிரவாதிகள் இந்து வழிப்பாட்டுத் தலங்களையும், மசூதிகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவது ஏன்? க. சத்தியநாதன், அரசவனங்காடு.

பல பூக்கள் மலரும் கதம்ப மாலைத் தோட்டமாகத் திகழ்ந்து, சமூக நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நமது நாட்டின் மக்களை பிளவுபடுத்துவதற்குத்தான். பிணிப் பிடித்த அவர்களது சிந்தனையின் வெளிப்பாடே இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்கள்.

ஆனால் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் மூலம் இந்தக் காட்டுமிராண்டிகள் தங்கள் குறிக்கோளில் வெற்றி பெற இயலவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பிலும் அந்தக் காட்டுமிராண்டிகள் தோற்றனர்.

குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு ஒரு சிறிய அசம்பாவிதம் கூட நடைபெறாமல் அங்கே சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கியது. ஆனால் ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகள் நாட்டில் நடைபெறும் கடைசி காட்டுமிராண்டிச் செயலாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனை.

இதற்கு வெறும் பிரார்த்தனை மட்டும் போதாது. ஒவ்வொரு முறையும் இது போன்று குண்டுவெடிப்புகள் நடைபெறும் போது உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றார்கள். ஆனால் இச்சம்பவங்கள் தொடர் கதைகளாகத் தொடர்கின்றன.

இதற்குக் காரணம், கணக்கு காட்டுவதற்காக அவசர கதியில் இந்தக் குற்றச்செயல்களில் அந்தம் வரை சென்று விசாரணை நடத்தாமல் அப்பாவிகளை கைது செய்வதுதான். உதாரணமாக சென்ற ஆண்டு இறுதிவாக்கில் உ.பி. மாநிலத்தில் நீதிமன்றங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் மூளையாகச் செயல்பட்டவர் என்று கூறி கொல்கத்தாவில் இருந்து ஒரு முஸ்லீம் இளைஞரைக் கைது செய்தனர்.

இவரைப் பற்றியும் பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் நீதிமன்றத்திற்கு முன்பு இந்த இளைஞர் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கும் அந்த குண்டு வெடிப்புகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார். அவசர கதி விசாரணைக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இத்தகைய விசாரணை மனப்போக்கு மாற வேண்டும். நேர்மையான, நடுநிலையான, திறமையான அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு நியமித்து இந்த வழக்குகளை விசாரித்தால்தான் இத்தகைய காட்டுமிராண்டிச் செயல்களுக்கு முற்றுப் புள்ளிவைக்க இயலும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசியுள்ளீர்களா? அவருடைய அணுகுமுறை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ச. கரிகாலன், கும்பகோணம்.

1999 முதல் 2002 வரை பல முறை அவரிடம் நேரில் பேசியுள்ளேன். பல பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் எடுத்து வைக்கும் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டுள்ளார். சில நேரம் எதிர்க் கேள்விகளைக் கேட்டு விளக்கங்களையும் பெற்றுள்ளார்.

அவருக்கும் அவரது கட்சிக்கும் பயன் அளிக்கும் விஷயங்கள் குறித்து நாங்கள் பேசும் போது, உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். உதாரணமாக 1999, ஜூலை 4 அன்று சென்னை சீரணி அரங்கில் முஸ்லீம்களின் வாழ்வுரிமை மாநாட்டிற்குத் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டு சேர்ந்து இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வரவிருந்த தருணத்தில் அந்த மாநாடு நடைபெறவிருந்தது. அ.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய லீக் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் அந்த மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

இத்திட்டத்துடன் நானும், எங்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலியும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தோம். ஆர்வத்துடன் எங்கள் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, தான் மாநாட்டில் பங்குக் கொள்வது குறித்து மறுநாள் பதில் அளிப்பதாக எங்களிடம் கூறினார்.

நாங்கள் போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பி, அடுத்து த.மா.கா. தலைவர் ஐயா மூப்பனாரை சந்திப்பதற்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தோம். அவரது வீட்டை அடையும் முன்பு, பாதி வழியில் எனது செல்பேசிக்கு போயஸ் தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய ஜெயலலிதாவின் உதவியாளர், "அம்மா உங்கள் மாநாட்டில் பங்குக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள்' என்ற தகவலைத் தந்தார்.

ஆகத் தனக்குச் சாதகம் என்று வரும்போது இவ்வளவு சுறுசுறுப்பான அணுகுமுறையை மேற்கொண்ட ஜெயலலிதா, எங்கள் கோரிக்கைகள் பொறுத்த மட்டில் எங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எனது தலைமையில் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் பங்குக் கொண்ட மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, ""கடந்த காலங்களில் பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டு வைத்தது தவறு; அதற்காக வருந்துகிறேன். இனி ஒரு போதும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறவு வைத்துக் கொள்ளாது'' என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை முறிக்கும் வகையில் 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டார்.

இதே மாநாட்டில், ""எனக்கு ஆதரவு அளித்தால் உங்கள் விருப்பமான தனி இட ஒதுக்கீட்டை நிறைவேற்றித் தருவேன்'' என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.

சட்டமன்றத்தில் சகோதரர் திருமாவளவன், ""கடற்கரைக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க அளித்த வாக்குறுதி என்னவாச்சு?'' என்று கேட்டபோது, ""நான் அப்படி எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கவில்லை'' என்று பதிலளித்து தனது இரட்டைவேட அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

இது எனது அனுபவம்! இப்படித்தான் பலதரப்பட்ட மக்களையும் அவர் தனது இரட்டைவேட அணுகுமுறையினால் வஞ்சித்துள்ளார்.

கேள்வித் திருவிழா (26.05.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)