பின்லேடனுக்கு ஒருயோசனை தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 09

புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் மானியம் வழங்குவதுபோல மற்ற மதத்தினருக்கும் வழங்குவது தானே நியாயம்? தர்மன் பெரியசாமி, போரூர்

நிச்சயமாக வழங்குவது தான் நியாகம்; வழங்கியும் வருகிறார்கள். ஆனால் ஹஜ் பயணத்திற்காக வழங்கப்படும் மானியம் பற்றி மட்டுமே விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. ஹஜ் பணத்திற்கு வழங்கப்படும் மானியம் போல பிற சமயத்தினரின் வழிபாடு ரீதியான பணிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே சலுகைகளும், மானியமும் வழங்கி வருகின்றன. இவை அரசயிலமைப்புச் சட்டத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 290-ஏ பிரிவு, கேரளா அரசின் நிதியிலிருந்து ஆண்டுதோறும் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்றும், இதுபோல் திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானத்திலிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்ட கோயில்களைப் பராமரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நிதியிலிருந்து 13 லட்சத்து 50 அயிரம் வழங்கப்பட வேண்டும், என்றும் கூறுகின்றது. ஹரித்வாரில் 2010ஆம் ஆண்டு நடைபெறும் கும்பமேளாவிற்கு 100 கோடி ரூபாய் அளிக்கப்படுமென்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதேபோல் கைலாஷ், மானஸரோவர் புனிதப் பயணங்களுக்காகவும், பாகிஸ்தானில் உள் சீக்கிய குருத்துவாராக்களுக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணங்களுக்காகவும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகின்றது. மானஸரோவருக்கு புனித யாத்திரைச் செல்லும் பயணிகளுக்கு குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளும் மானியம் வழங்கி வருகின்றன.

ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு மத்திய அரசு மட்டுமே, ஏர் இந்தியா பயணக் கட்டணத்திற்காக மானியம் வழங்கி வருகிறது. மாநில அரசுகள் இதற்காக எந்தவொரு மானியமும் வழங்குவதில்லை. இப்படி அளிக்கப்படும் மானியமும்கூட நமது அரசுடையாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றதே தவிர, ஹஜ் யாத்திரிகர்கள் கையில் கொடுக்கப்படுவதில்லை. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மத்திய ஹஜ் குழுவின் செல்லும் பயணிகளுக்கு மட்டுமே பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படுகின்றன. தனியார் பயண நிறுவனன் மூலம் ஹஜ் செல்வோருக்கு மானியம் அளிக்கப்படுவதில்லை. அரசுடமையாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் மூலம் மட்டுமே பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மத்திய அரசு, ஹஜ் குழுவிற்கு இந்த மானியத்தை வழங்குகின்றது.

பயணக்கட்டணமாக ஓர் இந்தியா நிர்ணயிக்கும் தொகையில் ஒரு பகுதி பயணிகளிடமிருந்தும், எஞ்சிய பகுதியை மத்திய அரசிடமிருந்தும் மானியமாகப் பெற்று மத்திய ஹஜ் குழு ஏர் இந்தியாவிடம் செலுத்துகின்றது. இவ்வாறு மானியமாக செலுத்தப்படும் தொகை ஏர் இந்தியாவின் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஓராண்டுச் சம்பளம் மற்றம் படிகளை அளிப்பதற்குப் போதுமானதாக இருக்கின்றது. எனவே ஹஜ் பயணத்திற்காக இந்திய அரசு அளிக்கும் மானியம், அதன் நிறுவனமான ஏர்இந்தியாவிற்கே மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஏர் இந்தியா அல்லாத வேறு விமானச் சேவையை மதத்யி ஹஜ் குழு பயணத்திற்காகப் பயன்படுத்துமேயானால் ஹஜ் பயணிகள் செலுத்த வேண்டிய தொகையும் அரசு அளிக்க வேண்டிய மானியமும் மேலும் குறைவாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒஸாமா பின்லேடனை நீங்கள் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆலோசனை சொல்வீர்கள்? என். செல்வராஜ், செம்போடை

உலகமெங்கும் அமெரிக்கா கட்டவிழ்ந்த உள்ள பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு அதுபோன்ற பயங்கரவாதத்தினால் தான் முடியும் என்று நீங்கள் கருதுவதாக ஊடகங்ள கூறுகின்றன. இது உண்மையா? என்று முதலில் வினவுவேன். ‘ஆம்’ என்று அவர் பதிலளித்தால், ‘அமெரிக்கப் பயங்கரவாதத்தை வீழ்த்துவதற்கு பயங்கரவாதத்தை வீழ்த்துவதற்கு உங்கள் அழிவாயுதங்கள் பயன்தாரது. அறிவாயுதங்கள்தான் பலன்தரும். அழிவாயுதங்களைக் கீழேப் போட்டுவிட்டு, அறிவாயுத கலாச்சாரத்தை முஸ்லிம்களிடையே பரப்புவதற்கு முன் வாருங்கள் என்று யோசனை கூறுவேன்.

மற்ற அரசியல் கட்சிகளில் சிறுபான்மைப் பிரிவு தலைவர்களாக இருப்பர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? மு. இஸ்மாயில், காரைக்கால்

சமையலுக்காக பயன்படுத்தப்படும் கறிவேப்பில்லையைப் போல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கட்சிக்குத் தேவை என்ற நிலையில் முக்கியத்துவம் பெறும் அவர்கள், அந்தப் பணி முடிந்தவுடன் சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கிப் போடுவதுவோல் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

தீவிரவாதப் பாதையில் இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எடுக்கும் நடவடிக்கை என்னென்ன? என். குமார், ஆரல்வாய்மொழி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தீவிரவாதப் பாதையில் இளைஞர்கள் சென்றுவிடாமல் தடுத்து, அவர்களை ஜனநாயக ரீதியில் தீவிரமாகச் செயல்பட வைப்பதுதான். ஒரு தீவிரவாதத்திற்கு இன்னொரு தீவிரவாதம் ஒருபோதும் தீர்வாகாது என்படை அடிப்படைக் கொள்கையாக த.மு.மு.க, அநீதிகளும் அக்கிரமங்களும் நடக்கும்போது வீதிக்கு வந்து ஜனநாயக அடிப்படையில் இளைஞர்களைப் போராட வைத்துள்ளது. தடையை மீறும் போராட்டங்களை நாங்கள் நடத்தினாலும், பொதுச் சொத்திற்கு சேதம் விளைவிக்கும் வகையில் இந்தப் போராட்டங்கள் அமைந்ததில்லை. சமீபத்தில் வேலூர் கோட்டை பள்ளிவாசல் தொடர்பான போராட்டமும் இதற்கு எடுத்துக்காட்டாகும். ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, இழைக்கப்படும் அநீதிகளுக்கு, காட்டப்படும் பாரபட்சங்களுக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டச் சரியான வழிமுறை தெரியாதவர்கள்தான் தீவிரவாதப் பாதைக்குச் செல்கிறார்கள். ஆனால் த.மு.மு.க இத்தகைய அராஜகத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்திச் சரியான வடிகாலை அமைத்துத் தந்து, இளைஞர்களின் ஆற்றல்களை ஆக்கப்பூர்வமாக மாற்றியுள்ளது. இதுமட்டுமின்றி சமூக இளைஞர்களின் ஆற்றல்களைச் சமூக சேவைகளில் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறோம். இதன் விளைவாகத்தான் சுனாமி போன்ற பேரிடர் தமிழகத்தில் அழிவுகளை ஏற்படுத்தியபோது, எம் தொண்டர்கள் பட்டினப்பாக்கத்லிருந்து தொடங்கி குளச்சல் வரை காவல்துறையினர் செல்வதற்கு முன்பே சீறிக் கொண்டிருந்த கடலை நோக்கிச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். ரத்த தானத்தல் முன்னணி வகிக்கும்¢அமைப்பாகத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் விளங்குகின்றது. சாலை விபத்து நடந்தால் நீடனடியாக களத்திற்கு தங்கள் ஆம்புலன்சுடன் விரைந்து சென்று ஜாதி&மத பேதங்களுக்கு அப்பாற்பட்டுச் சேவை செய்யும் மனப்பான்மைக் கொண்ட எங்கள் இளைஞர்கள் அழிவை ஏற்படுத்தும் தீவிரவாதத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. தங்கள் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடக்கும் மோசடி முதல் அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சம் வரை தடுப்பதற்கு எங்கள் இளைஞர்கள் தங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய பணிகளில்தான் த.மு.மு.க இளைஞர்கள் தீவிரவாதிகளாக இருக்கின்றார்கள்.

தற்போதைய விலைவாசி உயர்வு, காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்கிறீர்களா...? மு. அனிஃபா, நாகூர்

நிச்சயமாக! இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. பிரதமர் மன்மோகன்சிங் போர்க்கால அடிப்படையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்துள்ள நன்மைகளையெல்லாம் மறந்து காங்கிரஸ் மீதான தங்கள் அதிருப்தியை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தும் நிலைதான் ஏற்படும்.

அ.தி.மு.க ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் சட்டமன்ற நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன? இரா. புகழேந்தி, அரியலூர்

திமுக ஆட்சியில் சட்டமன்ற நடவடிக்கைகள் நாம் ஒரு ஜனநாயக ஆட்சி முறையில் இருக்கின்றோம் என்பதைப் பிரதிபலிக்கின்றது. அதிமுக ஆட்சியில் சட்டமன்றம் தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கின்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

தமிழன் எக்ஸ்பிரஸ், கேள்வித் திருவிழா 29-05.2008