இஸ்லாத்தில் பெண்களின் சுதந்திரம் தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 12

இஸ்லாத்தில் பெண்களின் சுதந்திரம் இஸ்லாமில் ஜாதிக் கொடுமை உண்டா? சதிஷ், சென்னை

நிச்சயமாக இல்லை. ‘மனிதர்களே... உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே உங்களைப் பல இனத்தினராக, நிறத்தினராக, குலத்தினராக ஆக்கினோம். உங்களில் மேன்மையானவர் இறையுணர்வு மிக்கவரே’ என்று பிரகடனம் செய்கிறது திருக்குர்ஆன். ‘கறுப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே அல்லது அரபியர்கள் மற்றும் அரபி அல்லாதவரிடையே எவ்வித வேறுபாடும் இல்லை’ என்று கூறி இனவெறி ஜாதி வெறிக்கு சம்மட்டி அடி கொடுத்தார்கள் நபிகளால் (ஸல்) அவர்கள். தொழுகைக்கு அழைப்பு அளிக்கும் பொறுப்பை கருப்பரான பிலால் அவர்களுக்கு அளித்து, அவரை உயர்ந்த குலத்தினர்கூட ‘தலைவர் பிலால்’ என்று மதிக்க வழி வகுத்தார்கள். இத்தகைய சிறப்பு மிகுந்த மார்க்கத்தில் ஜாதிக் கொடுமை எப்படி இருக்க முடியும்? வெறும் எழுத்தில் மட்டும் அல்ல... செயலிலும் இன ரீதியான வேறுபாடுகளை இஸ்லாம் கலைந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக மால்கம் எக்ஸ் என்ற அமெரிக்க கருப்பர் இனப் போராளியின் ஒரு அனுபவத்தை இங்கே குறிப்பிடலாம்.

முஸ்லிம்கள் ஆயுளில் ஒருமுறை நிறைவேற்ற வேண்டிய ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா சென்றிருந்த மால்கம் எக்ஸ், அங்கிருந்து எழுதிய கடிதத்தில் இருந்து இஸ்லாம் எப்படி நிற, இன, மொழி வேற்றுமைகளில் அடிப்படையினை, பாகுபாட்டை முறியடத்தது என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும்.

மால்கம் எக்ஸ் தனது கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்தார்கள். அவர்கள், நீல நிறக் கண்ணுடைய மங்கையர் முதல், கருப்பு நிற ஆப்பிரிக்கர்கள் வரை’ எனப் பல நிறமுடையவர்களாக இருந்தார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான சடங்ககுகளை ஒன்றுபோல் சகோதரத்துவ, ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் நிறைவேற்றி வந்தோம். அமெரிக்காவில் கருப்பர்களும், வெள்ளையர்க்கும் இடையே இது போன்ற ஓர் ஒற்றுமையை நான் ஒரு போதும் கண்டதில்லை. அமெரிக்கா இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஒரு மதம் சமூகத்தில் இருக்கும் இன வேற்றுமையை ஒழித்து விடுகின்றது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் மால்கம் எக்ஸ்.

எனவே, ஜாதிக் கொடுமையை இஸ்லாம் எந்த வகையிலும் அங்கீகரிக்கவில்லை. எந்த முஸ்லிமாவது ஜாதிக் கொடுமையில் ஈடுபட்டால் அதனை அவனது தனிப்பட்ட அடாவடித்தனமாகத்தான் கருத வேண்டும்.

பெண்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் சுதந்திரம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? செல்வி சரண்யா, திருச்சி

ஒப்புக்கொள்ள மாட்டேன். பெண்கள் தட்டுமுட்டுப் பொருள்போல் கருதப்பட்டு வந்த காலததில் இறைவனின் நிறைவான மார்க்கமாக அருளப்பட்ட இஸ்லாம், பெண்களுக்கு பல உரிமைகளை அளித்தது. நமது நாட்டில் கூட நமது சம காலத்தில்தான் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று பிரகடனம் செய்தது. பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைக்கும் அவலத்தைக் கடைபிடித்து வந்த சமூகத்தில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெண் குழந்தையைச் சரியாக வளர்த்து ஆளாக்குபவர் ‘சுவனவாசி’ என்று கூறி பெண் சிசுக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

ஒரு பெண்ணுடைய பூரணச் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. திருமண உறவை முறித்துக் கொள்ளும் உரிமை ஆண்களுக்கு இருப்பதுபோல் பெண்களுக்கும உண்டு என்று உரிமை அளித்துள்ளது இஸ்லாம். இந்த உரிமையைப் பயன்படுத்தும் பெண்கள் தமிழகத்தில் கூட இருக்கின்றார்கள்.

ஆனால் இதே நேரத்தல், பெண்களின் உடல் கூறு இயல்புகைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஆண்களுக்கு கவர்ச்சிப் பொருளாக காட்சி அளிக்காமல் முழுமையாக தங்கள் முகத்தைத் தவிர இதர உடல் பகுதிகளை மறைக்க வேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்காமல அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இன்று மேற்கத்திய உலகில் இஸ்லாத்தைத் தழுவுவோரில் ஆறில் ஐவர் பெண்களாகத்தான் உள்ளார்கள். இதற்கு அவர்கள், தங்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பை அளிக்கும் மதம் இஸ்லாம்தான் என்றும் காரணம் சொல்கிறார்கள்.

முஸ்லிம்களில் ‘நாத்திகர்கள்’ இருக்கிறார்களா? அவர்களை நீங்கள் மதிப்பீர்களா? உ.கணேஷ், காரைக்குடி

முஸ்லிம் என்றாலே, ‘ஏக இறைவன் ஒருவன் மீது நம்பிக்கைக் கொண்டவன்’ என்று பொருள். எனவே ஒரு முஸ்லிம் நாத்திகராக இருக்க இயலாது.

உங்கள் அமைப்பின் பிரதான நோக்கம் என்ன? இரா. மாமன்னன், கும்பகோணம்

நமது அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகளின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் சமூகப் பொருளாதார, கல்வி முன்னேறறத்திற்காகப் பாடுபடுதல்; சமூக நல்லிணக்கம் மேலோங்கியிருக்கப் பாடுபடுதல்; வரதட்சணை, வட்டி, ஆபாசம், மது, சூதாட்டம் போன்ற தீமைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்தல். ஜாதி, மதம் பாராமல் அனைத்து மக்களின் துயர் துடைப்பு உட்பட அனைத்து சேவைகளையும் செய்தல். இவைதான் எங்கள் அமைப்பின் பிரதான நோக்கங்களாகும்.

இஸ்லாம் என்பது மதமா? நெறிமுறையா? கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள். என். இளங்கோவன், காஞ்சிபுரம்

இஸ்லாம் என்பது ஒரு வாழ்வியல் திட்டம். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே. முகம்மது நபி (ஸல்) இறைவனின் இறுதி தூதராக இருக்கின்றார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். உலகைப் படைத்த இறைவன், இவ்வுலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுப்பதற்காக மனிதர்களிலிருந்தே இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்தான். அந்தத் தூதர்களின் வரிசை ஆதாமிலிருந்து தொடங்கி ஆப்பிரஹாம் (இப்ராஹிம்), மோசஸ் (மூஸா), ஜீஸஸ் (ஈசா) என்று விரிவாகி முஹம்மது (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெறுகின்றது.

இஸ்லாம் என்ற பதத்திற்குச் சாந்தி, சமாதானம் என்றும் இறைவனிடம் முற்றிலும் சரணடைதல் என்றும் பொருள் உண்டு. இஸ்லாத்தின் விதிமுறைகளைகளின்படி இறைவனுக்கு முற்றிலும் அடிப்பணிந்தவர்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

நாம் இந்த உலகில் வாழ்வதின் லட்சியம் இறைவனை முற்றிலும் வணங்குவதற்கே என்பது இஸ்லாத்தின் கோட்பாடு எனவே வாழ்வின் ஒவ்வொர துறையிலும் எப்படி வாழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறதோ அந்த அடிப்படையில் வாழ்ந்தால் முழு வாக்கையும் இறைவனுக்குச் செய்யப்படும் வணக்கமாக அமைந்துவிடும்.

இந்த அடிப்படையில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தரும் விடைகளை இஸ்லாம் வழங்குகிறது.
ஆன்மீகத்தோடு நில்லாமல் சுயமரியாதை சிந்தனைகள், ஆட்சிமுறை, குடிமக்கள் உரிமைகள், வறுமை ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு, போர்விதிகள், திருமணம் தொடங்கி இறப்பு வரை உள்ள உறவுகள், சமூக உறவுகள், நீதிமன்ற முறைகள், சமூக நல்லிணக்கம், சுரண்டலுக்கு எதிரான வணிகமுறை, அறிவியலைத் தூண்டும் சிந்தனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனச் சிந்திப்பதற்கும், வாசிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் ஏராளமான ஒழுங்குமுறைகள் இஸ்லாத்தில் உண்டு. மேலும் விரிவாக அறிவதற்கு த.மு.மு.க தலைமையகம், 7. வட மரைக்காயர் தெரு, சென்னை (தொலைப்பேசி: 252477824) என்ற முகவரிக்கு நீங்கள் தொடர்பு கொண்டால் அதை நிரூபிக்கும் நூல்களை உங்களுக்குத் தருகிறோம்.

கேள்வித் திருவிழா, தமிழன் எக்ஸ்பிரஸ்-12.06.2008