சையீத் சுலைமான் நத்வி

பத்திரிகையாளரான சையீது சுலைமான் நத்வி, பீகாரில் பாட்னா மாவட்டத்தில் உள்ள தெஸ்னா என்ற சிற்றூரில் 1884ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தையாரும் பாட்டனாரும் யூனானி வைத்தியர்கள். சையீது சுலைமான் நத்வி தனது தந்தை ஹக்கீம் சையீது அபுல் ஹஸனிடமும் பின்னர் புல்வாரி ஷரீஃபி உள்ள மத்ரஸாவிலும் இஸ்லாமிய மார்க்க கல்வி கற்றார். அதன்பின் தர்பங்காவில் உள்ள மத்ரஸா இம்தாதிய்யாவிலும் கற்றார்.

முஸ்லிம் மார்க்க மேதைகள் 1897ஆம் ஆண்டில் ‘நத்வத்துல் உலமா’ என்னும் அமைப்பைத் தொடங்கினார்கள். பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்த சையத் அகமத் கானின் அணுகுமுறையில் அதிருப்தி கொண்ட மவ்லானா ஷிப்லி நுஃமானி உள்ளிட்ட பலர் இதன் முக்கிய உறுப்பினர்களாவர். புதிய முறையில் கல்வி போதிக்க தேவ்பந்துக்கும் அலிகருக்குமிடையே இவர்கள் ஒரு கல்லூரியைத் தொடங்கினார்கள். இந்தக் கல்லூரிக்கு ‘நத்வா’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதுவே இன்று லக்னோவில் செயல்படும் தாருல் உலூம் நத்வத்துல் உலூம் இஸ்லாமிய சர்வகலாசாலை ஆகும். 1901ஆம் ஆண்டில் சையீது சுலைமான் நத்வி இதில் சேர்ந்து ஏழாண்டுகள் மார்க்கக் கல்வி பயின்றார்.

பத்திரிகைக்குத் தடை

அரசியலில் ஒரேவித கருத்துடையவர்களாக இருந்த மௌலானா அபுல்கலாம் ஆஸாதும் ஷிப்லி நுஃமானியும் நண்பர்கள் ஆயினர். இவர்கள் இருவரும் கூட்டாக கோல்கட்டாவிலிருந்து ‘அல் ஹிலால்’ என்னும் உருதுமொழிப் பத்திரிகையைத் தொடங்கினார்கள். அபுல் கலாம் ஆஸாத் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்தப் பத்திரிகையில் சையீது சுலைமான் நத்வி ஆங்கில ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். கோல்கட்டா முதல் பெஷாவர் வரையிலும், சென்னை முதல் பெங்களூரு வரையிலும் உருது மொழி பேசும் மக்களிடையே இவருடைய கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்ட அவருடைய கட்டுரைகளுக்கு எதிர்பாராத அளவுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதைக் கண்ட ஆட்சியாளர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் அந்தப் பத்திரிகைக்கு அவர்கள் தடை விதித்தார்கள்.1914ஆம் ஆண்டில் சையீது சுலைமான் நத்வி பூனேயில் டெக்கான் கல்லூரியில் அரபி மொழிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் அவர் அங்கு பணியாற்றிய பின் ஆஸம்கார் சென்று கல்வியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். கல்விப் பணியில் ஈடுபட்டு வந்த அவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலருடன் ஒத்துழைத்தார்.

கிலாஃபத் தூதுக்குழு உறுப்பினர்

முதல் உலகப் போரில் தோல்வியுற்ற துருக்கிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவதற்காக மௌலானா முஹம்மது அலி தலைமையில் மூவர் குழு 1920ஆம் ஆண்டு லண்டன் சென்றது. டாக்டர் சையத் ஹுஸைன் மற்றும் சையீது சுலைமான் நத்வி ஆகியோர் அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களாவர். இந்தக் குழு கிலாஃபத் தூதுக்குழு என்று அழைக்கப்பட்டது. புனித பூமியில் உண்மையான ஜனநாயக அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய முஸ்லிம்களின் கோரிக்கையை ஷரீப் ஹுஸைனிடம் எடுத்துரைப்பதற்காக மக்கா சென்ற தூதுக் குழுவிலும் அவர் கலந்து கொண்டார்.1921ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய கிலாஃபத் கமிட்டி கூட்டத்திற்கு சையீது சுலைமான் நத்வி தலைமை வகித்தார். அந்த ஆண்டு அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக 1924 மற்றும் 1926ஆம் ஆண்டுகளில் இவரது தலைமையில் முஸ்லிம்கள் தூதுக் குழு அனுப்பி வைக்கப்பட்டது. இவரின் உருது மொழிப் புலமை காந்திஜியையும் நேருவையும் மிகவும் கவர்ந்திருந்தது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் 1940ஆம் ஆண்டு இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

பண்டித ஜவஹர்லால் நேரு எவ்வளவோ தடுத்தும் கேளாது 1950ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தார். பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபையின் ஒரு பிரிவாகிய தஃலீமாத் வாரியத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். 1953ஆம் ஆண்டு கராச்சியில் அவர் காலமானார். சிறந்த நூல்களை இவர் எழுதியுள்ளார். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வை வர்ணிக்கும் சீரத்துன் நபி என்னும் சீரிய நூலாகும். இது தவிர அன்னை ஆயிஷா அவர்களின் வாழ்வை விவரிக்கும் நூல், அரபு மொழி அகராதி உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.1925ல் அக்டோபர் மற்றும் நவம்பரில் அவர் சென்னை வந்திருந்த போது நபிகள் நாயகம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றினார். இவரது இந்த 8 சொற்பொழிவுகளும் நூலாக தொகுக்கப்பட்டு 'குத்பாத் மத்ராஸ்' என்று அழைக்கப்பட்டு பிரபலமடைந்தது.

குறிப்புகள்: 

Foreign and Political Department Procd. 1917-1935.

Proceedings of the Central Legislative Assembly, 1927-1931, 1933-1935.

N.N.Mitra, Indian Annual Register, 1935-1947.

Indian Who's Who, 1937-1938.

தொடரும்


Who's Online

We have 53 guests and no members online