முஹம்மது அப்துல் ரஹ்மான் சாகிப்

பேச்சுத் திறத்தால் ஏராளமான இளைஞர்களைத் தேசிய இயக்கத்தில் ஈர்த்தவர் முஹம்மது அப்துல் ரஹ்மான் சாகிப்.

மாப்பிள்ளை முஸ்லிமாகிய அவர், 1930ஆம் ஆண்டு கோழிக்கோடு கடற்கரையில் உப்புச் சத்தியாக்கிரகம் செய்தபோது போலீசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். 1940ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை பாதுகாப்புக் கைதியாக தமிழ்நாட்டில் வேலூரில் சிறை வைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இடதுசாரித் தலைவர்களுடன் பணியாற்றிய அவர் ஒரு பத்திரிகையாளர்.

இவர் கேரளத்தில் கொடுங் களூரில் 1898ஆம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் உடன் பிறந்தவர்கள். அவருடைய தந்தை நிலக்கிழார். தாயும் பெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். புன்னக்காச்சல் என்னும் கிராமத்தில் தொடக்கக் கல்வி பயின்ற அவர், பின்னர் கொடுங்களூர் அரசினர் பள்ளியில் சேர்ந்து பள்ளியிறுதித் தேர்வில் தேறினார். அதன்பின் தமிழ்நாட்டில் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இடையிலேயே கல்லூரியிலிருந்து நின்று விட்டார். 

பின்னர் கள்ளிக் கோட்டைக்குச் சென்று அங்கு பேசல் ஜெர்மன் மிஷன் கல்லூரியில் சேர்ந்தார். சிறிது நாட்களில் அந்தக் கல்லூரியிலிருந்தும் நின்று விட்டார். அதன்பின் சென்னை சென்று முகம்மதியக் கல்லூரியில் சேர்ந்து ‘இண்டர்மீடியட்’ தேர்வில் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு சென்னையில் மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். அங்கிருந்தும் இடைநின்று விட்டார்.

கல்வியைத் துறந்தார்

சில மாதங்கள் கழித்து அவர்  அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக கல்லூரியில்  சேர்ந்து படித்தபோது, காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியிருந்தார். அதில் கலந்து கொள்வதற்காக வகுப்பைப் புறக்கணித்து விட்டு மலபாருக்குச் சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியிலும் கிலாஃபத் இயக்கத்திலும் சேர்ந்தார். 

மௌலானா முகம்மதலியை வழிகாட்டியாகக் கொண்டு அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டார். கள்ளிக்கோட்டை சென்ற அவர் கேரள கிலாஃபத் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். 

1921ஆம் ஆண்டு நடை பெற்ற மாப்பிள்ளைமார் கிளர்ச்சி யின் போது, ஹிந்துக்கள் தாக்கப்படுவதைத் தடுத்தார். அந்தக் கிளர்ச்சியின்போது, கிலாஃபத் ராஜ்ஜியம் பிரகடனப் படுத்தப்பட்டதால் பிரிட்டிஷ் ஆட்சி வெகுண்டெழுந்து ராணுவச் சட்டத்தை அமலாக்கியது.

அந்தச் சட்டத்தின்படி 1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று முஹம்மது அப்துல் ரஹ்மான் சாகிப் கைது செய்யப்பட்டார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஆட்சேபகரமான கட்டுரை எழுதியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு இரண்டு வருட  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை மத்திய சிறையிலும் வேலூர் சிறையிலும் அவர் தண்டனை அனுபவித்தார்.

அவர் சிறையிலிருந்து விடுதலையானபோது மாப்பிள்ளை மார் முஸ்லிம்கள் பெரிய அளவில் வரவேற்பளித்தனர். விடுதலையான பின்பும் அவர் ஓயவில்லை. மாப்பிள்ளைமார் கிளர்ச்சியை அடக்க ‘மாப்பிள்ளா அவுட்ரேஜ் சட்டம்’ ‘மாப்பிள்ளா கத்திச் சட்டம்’ என்னும் இரு சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தது. முஹம்மது அப்துல் ரஹ்மான் சாகிப் அவற்றை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

அல் அமீன் இதழ் தொடக்கம்

1928ஆம் ஆண்டு ‘அல் அமீன்’ என்னும் மலையாள மொழி வாரம் மும்முறை இதழை அவர் தொடங்கினார். 1930ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முதல் அது நாளிதழாக வெளியிடப்பட்டது. ஆனால், அந்தப் பத்திரிகை மீது பிரிட்டிஷ் ஆட்சி நடத்திய அடக்குமுறை காரணமாக 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அது நிறுத்தப்பட்டது. 

1930ஆம் ஆண்டு கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்த முடிவு செய்தது. அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்ற மலபார் முஸ்லிம்கள் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் இந்த முடிவை எதிர்த்தனர். மலபாரில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் அவர்கள் கலவரம் செய்தார்கள். அந்தக் கலவரங்களை முஹம்மது அப்துல் ரஹ்மான் சாகிப் மற்றும் மொய்டு மௌலவி ஆகியோர் துணிச்சலுடன் தடுத்து நிறுத்தியதோடு, முஸ்லிம்கள் தேசிய இயக்கத்தில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஏராளமான முஸ்லிம்கள் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றனர்.

போலீசாரின் தாக்குதல்

கோழிக்கோட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது கடற்கரையில் முஹம்மது அப்துல் ரஹ்மான் சாகிபை போலீசார் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். 1930ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்தபின் அவர் தேசிய இயக்கப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். 1931ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் கோழிக்கோடு நகராட்சி உறுப்பினராகப் பதவி வகித்தார். அவர் தனது பேச்சுத் திறமையால் ஏராளமான இளைஞர்களைத் தேசிய இயக்கத்தில் சேர்த்தார். 1937ஆம் ஆண்டில் அவர் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காலப்போக்கில், காங்கிரசில் இருந்த இடதுசாரி தலைவர்களுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அதன்விளைவாக அவர்களின் கருத்துப்படி அவர் செயல்பட்டார். 

1939ஆம் ஆண்டு அவர் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பணியாற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினராகவும் ஆனார்.

பார்வர்ட் பிளாக் தலைவரானார்

திரிபுராவில் 1939ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று வந்தபின் அவர் காங்கிரசிலிருந்து விலகி ‘பார்வர்ட் பிளாக்’ கட்சியில் சேர்ந்தார். 1939ஆம் ஆண்டிலிருந்து கேரள பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார்.

1940ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வரை வேலூர் சிறையில் பாதுகாப்புக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார்.

1945ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின் மலபார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி அவர் திடீரென்று காலமானார். அவருடைய மறைவு காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

மாப்பிள்ளை முஸ்லிம் களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த முஹம்மது அப்துல் ரஹ்மான் சாகிப், ஏராளமான இளைஞர்கள் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேரக் காரணமாக இருந்தார் என்ற சிறப்புக்கு உரியவராவார்.

1988ல் இவர் நினைவாக இந்திய தபால் துறை அஞ்சல் தலையை வெளியிட்டது. இவரது வாழ்வை பின்னணியாக கொண்டு பிரபல மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுத்தன் நம்புதிரி மரணமில்லாத மனுசியன் என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

 எர்னாதில் உள்ள இவரது இல்லத்தை கேரள அரசு ‘‘நஸ்ருல் இஸ்லாம்’’ என்ற பெயரில் அரசு நினைவகமாக பராமரித்து வருகின்றது.2011ல் திரைக்கு வந்த பி.டி. குஞ்சு முஹம்மது இயக்கிய வீரபுத்திரன் என்ற மலையாள திரைப்படம் இவரது வாழ்வை சித்தரிக்கின்றது.

 


Who's Online

We have 54 guests and no members online